

சென்னை
மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நெருக்கடி ஏற்படும் சமயங்களில், பயண அட்டை இல்லாத பயணி கள், தங்களது வாகனங்களை நிறுத்திவைக்க அனுமதி மறுக்கப் படுகிறது.
மேலும், டிரிப் கார்டுகள் வைத்தி ருக்கும் பயணிகளை டிராவல் கார்டு வாங்குமாறு மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் அறி வுறுத்துகிறார்கள். கார்டு மூல மாகவே பார்க்கிங் கட்டணத்தையும் செலுத்தலாம் என்று கூறுகின்றனர். ஆனால், டிராவல் கார்டு பெற்ற பயணிகள், தங்களுடைய பயணத் துக்கு அதிக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த குளறுபடிகளால் பயணிகள் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயிலில் செல்வதற்காக, வீடுகளில் இருந்து, தங்களது இருசக்கர வாகனங்களிலும், கார் களிலும் மெட்ரோ ரயில் நிலை யத்துக்கு வந்து, அங்கிருந்து மெட்ரோ ரயில்களில் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கின்றனர்.
வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக விமான நிலையம், ஆலந்தூர், திருமங்கலம், கோயம் பேடு, வடபழனி, அசோக்நகர் உட்பட 23 ரயில் நிலையங்களிலும் வாகனம் நிறுத்தும் இடவசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இருசக்கர வாகனத்துக்கு மாதாந் திர கட்டணம் குறைந்தபட்சம் ரூ.250, காருக்கு ரூ.500 எனவும், அதிகபட்சமாக இருசக்கர வாகனத் துக்கு ரூ.1,000 எனவும், காருக்கு ரூ.2000 எனவும் வசூலிக்கப்பட்டு வருகிறது. திருமங்கலம், கிண்டி, மீனம்பாக்கம், அசோக்நகர், மண் ணடி, அண்ணாநகர் கிழக்கு, நங்க நல்லூர் ரோடு ஆகிய இடங்களில் குறைந்தபட்சமாக இருசக்கர வாகனத்துக்கு ரூ.500, காருக்கு ரூ.1,000 எனவும், அதிகபட்சமாக இருசக்கர வாகனத்துக்கு ரூ.1,500, காருக்கு ரூ.3,000 எனவும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
விமான நிலையத்தில் இரு சக்கர வாகனத்துக்கு ரூ.1,000, காருக்கு ரூ.3,500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே, மணிக்கணக்கில் இருசக்கர வாக னத்துக்கு ரூ.10 முதல் ரூ.50 எனவும், காருக்கு ரூ.20 முதல் ரூ.100 எனவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்திலும் ஒரேமாதிரியான கட்டணம் நிர்ணயிக்கப்படாமல், ரயில் நிலையங்களுக்கு ஏற்றவாறு மாறுபட்டு வசூலிக்கப்படுவது பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் வரும் 1-ம் தேதி முதல் வாகன நிறுத்த கட்டணத்தை டிராவல் கார்டு மூலமே செலுத்த லாம் என்று கூறப்பட்டுள்ளது.
டிராவல் கார்டு
இந்த புதிய நடைமுறை குறித்து ஆலந்தூரில் பயணிகள் சிலர் கூறியதாவது:
இப்போதே பார்க்கிங் கட்ட ணத்தை டிராவல் கார்டு மூலம் வாங்க ஆரம்பித்துவிட்டனர். பார்க் கிங்கில் சொன்னபடி, என்னுடைய டிரிப் கார்டை டிராவல் கார்டாக மாற்றினேன். அதில் ரூ.500 செலுத்தி இருக்கிறேன். இதற்கு முன்பு டிரிப் கார்டு மூலம் ஆலந்தூரில் இருந்து அரசினர் தோட்டம் செல்ல ரூ.32 கொடுத்துவந்த நான், இப்போது ரூ.36 செலுத்த வேண்டியிருக்கிறது.
இதுதவிர, கார்டு இல்லாமல் டோக்கன் வாங்கி பயணிக்கும் பயணிகள் அலைக்கழிக்கப்படும் நிலை உருவாகியிருக்கிறது. நெருக் கடியான நேரங்களில், அவர் களுக்கு பார்க்கிங்கில் முன்னுரிமை தரக் கூடாது என்று வாய்மொழி உத்தரவு வந்திருப்பதாகச் சொல்கி றார்கள். கவுன்ட்டர் மற்றும் பார்க் கிங்கில் தாங்கள் செய்யவேண்டிய பணிகள் குறித்து ஊழியர்கள் அறிந்துகொண்டு, இப்போதுதான் கொஞ்சம் வேகமாக பணிகள் நடக்கின்றன. புதிய நடைமுறை யால் பயணிகளுக்கு விரைவான சேவை கிடைப்பதில் தடங்கல் ஏற் படும்.
மேலும், மெட்ரோ ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை படிப்படி யாக அதிகரித்து வருகிறது. ஆலந் தூர் போன்ற பெரிய மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங் களை நிறுத்துவதற்கு இடப் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது. அனைத்து ரயில் நிலையங்களிலும் தேவைக் கேற்ப இட வசதியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பயணிகள் கூறியுள்ளனர்.
அதிகாரி விளக்கம்
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் வாகனக் கட்டணத்தை எளிமையாக செலுத் தும் வகையில் பயண அட்டையால் மட்டும் கட்டணம் செலுத்தும் வசதி, வரும் 1-ம் தேதி முதல் அமல் படுத்தப்படுகிறது. இதுதொடர்பான புகார்கள், அசவுகரியங்கள் இருந் தால் சம்பந்தப்பட்ட மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் அளிக்கலாம். உரிய நட வடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.