8 ஆண்டு ஆட்சியில் என்ன செய்தீர்கள்: பாலாற்றின் குறுக்கே ஏன் தடுப்பணை கட்ட முயற்சிக்கவில்லை?- திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கேள்வி

8 ஆண்டு ஆட்சியில் என்ன செய்தீர்கள்: பாலாற்றின் குறுக்கே ஏன் தடுப்பணை கட்ட முயற்சிக்கவில்லை?- திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கேள்வி
Updated on
1 min read

8 ஆண்டு ஆட்சியில் என்ன செய்தீர்கள்: பாலாற்றின் குறுக்கே ஏன் தடுப்பணை கட்ட முயற்சிக்கவில்லை?என திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். 

தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையில், தனியார் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, ''மக்களுக்கான அடிப்படை விஷயங்களை மட்டுமே பிரச்சாரத்தில் முன்வைத்திருக்கிறோம். குடிநீர், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. நிறுத்திவைக்கப்பட்ட முதியோர் உதவித்தொகை, சரியாகச் செயல்படாத 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளையே மக்கள் முன்னிறுத்துகிறார்கள். 

வேலூர் பகுதியில் சிப்காட் தொழிற்சாலையை கொண்டுவருகிறேன் என்று கூறியிருக்கிறேன். இதன்மூலம் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு பணி கிடைக்கும். ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரிவாக்கம் செய்து, தண்ணீரை வேலூர் மக்களுக்கு அளிப்பதாக வாக்குறுதியில் தெரிவித்துள்ளேன்.

தமிழகத்தில் ஏராளமான அணைகளைக் கட்டியது திமுக. எண்ணிலடங்கா அணைகள், திட்டங்களைத் தமிழகம் முழுவதும் கொண்டு வந்தது திமுகவும் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த அப்பாவும்தான். இதற்கான ஆதாரங்களையும் ஒவ்வொரு முறையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், எட்டு ஆண்டுகால அதிமுக ஆட்சியில், நீங்கள் என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. பாலாற்றின் குறுக்கே நாங்கள் தடுப்பணைகளைக் கட்ட ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுக்கும் போதுதான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதை அவர்கள் தொடர்ந்திருக்கலாமே, ஏன் பாலாற்றின் குறுக்கே அதிமுக அணைகளைக் கட்டவில்லை?'' என்றார் கதிர் ஆனந்த்.
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in