

தூத்துக்குடி
உலக பிரசித்திபெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 437-வது ஆண்டு திருவிழா தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் கொடியேற்றி வைக்க, வெகு விமர்சையாக தொடங்கியது.
உலக பிரசித்திபெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 437-வது ஆண்டு திருவிழா இந்த ஆண்டு வெகுவிமர்ச்சையாக கொண்டாடப்படுகிறது. இன்று (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு ஆயர் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை கொடியேற்றி வைத்தார். இதில் சமாதான புறாக்கள் பறக்க விட்டனர். கொடிமரத்தில் வைத்து பொதுமக்கள் பால், பழம் வழங்கினர். இதனையடுத்து மதியம் 12 மணிக்கு அன்னைக்கு முதன்மை குரு ரோலிங்டன் தலைமையி்ல் பொன் மகுடம் சூட்டப்படுகிறது.
6-ம் நாள் திருவிழாவான ஜூலை 28-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு ஆயர் தலைமையில் புது நன்மை, கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி நடக்கிறது.
ஆகஸ்ட் 4-ம் தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு ஆயர் பெருவிழா மாலை ஆராதாணை நடைபெற உள்ளது. அதன்பின் இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெறும்.
திருவிழாவி்ன் முக்கிய நிகழ்வான அன்னையின் பெருவிழா ஆகஸ்ட் 5-ம் தேதி (திங்கட்கிழமை) அன்னையின் பெருவிழாவான அன்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30 மணிக்கு 2-ம் திருப்பலியும் கோட்டார் ஆயர் நசரேன் தலைமையில் நடக்கிறது.
அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது. காலை 9 மணி மற்றும் 10 மணிக்கும் மறைமாவட்ட முதன்மை குரு ரோலிங்டன் தலைமையில் திருப்பலி நடக்கிறது. நண்பகல் 12 மணிக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோனி டிவோட்டா தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலி நடைபெற உள்ளது.
மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையில் மாலை 5.30 மணிக்கு ஆடம்பர திருப்பலியும் நடக்கிறது. இரவு 7.00 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவப்பவனி நடைபெறுகிறது. இதனையடுத்து 10.00 மணிக்கு புனித பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக் கொடுத்தல் நற்கருணை ஆசீர் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் இறைமக்கள் செய்து வருகின்றனர்.