

பெ.ஸ்ரீனிவாசன்
திருப்பூர்
போலீஸார் தங்களது பணிச் சூழல் மற்றும் பிற நேரங்களில் இருசக்கர வாகனங்களை இயக்கும்போது தலைக்கவசம் அணிவதை கண்காணித்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையின் புதிய தலைவராக (டிஜிபி) ஜே.கே.திரிபாதி பதவியேற்றது முதல், காவல்துறையினர் பரிசுப் பொருட்கள் பெறக்கூடாது, வரதட்சணை வாங்க கூடாது என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார். வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக காவல் துறையிடம் பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் கேட்டிருந்தது. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது காவல் துறையில் பணிபுரிவோர் தங்களது பணிச் சூழல் மற்றும் பிற நேரங்களில் இருசக்கர வாகனங்களை இயக்கும்போது தலைக்கவசம் அணிவதை கண்காணித்து அறிக்கை அளிக்க வாய்மொழி உத்தரவு ஒன்று நுண்ணறிவு பிரிவினருக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக திருப்பூர் நுண்ணறிவு பிரிவு போலீஸார் கூறும்போது, ‘தலைக் கவசம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் போலீஸார், முதலில் விதிகளை சரிவர பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து போலீஸாரும் தலைக் கவசம் அணிவதை கண்காணித்து, அந்த தகவலை சம்பந்தப்பட்ட மாநகர ஆணையர், மாவட்ட கண் காணிப்பாளருக்கு தெரிவிக்க வேண்டும். விதிகளை பின்பற்றாத வர்கள் குறித்த தகவல்களையும் அனுப்ப வேண்டும். அந்த தகவலின் பேரில் ஆணையரோ, காவல் கண்காணிப்பாளரோ சம்பந்தப் பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.
திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் சஞ்சய்குமாரிடம் கேட்ட போது, ‘அனைத்து போலீஸாரும் இருசக்கர வாகனங்களை இயக்கும்போது தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். பொதுமக்களுக்கு என்ன அறிவுறுத்தல்கள் பின்பற்றப் படுகிறதோ, என்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதோ அதுவே போலீஸாருக்கும் உரியது. விதிகளை மீறும் போலீஸாரை கண் காணித்து வழக்குப் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.