Published : 26 Jul 2019 10:54 AM
Last Updated : 26 Jul 2019 10:54 AM

அரியலூர் புத்தகத் திருவிழாவில் 6 நாட்களில் ரூ.1 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனை: கரூர் புத்தகத் திருவிழாவில் உள்ளூர் படைப்பாளிகளுக்கென தனி அரங்கம்

அரியலூர்/ கரூர்

அரியலூர் புத்தகத்திருவிழாவில் 6 நாட்களில் ரூ.1 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதாக புத்தகத் திருவிழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு சார்பில் 5-ம் ஆண்டு புத்தகத் திருவிழாவை ஜூலை 19-ம் தேதி மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.

100-க்கும் மேற்பட்ட அரங்கு களை கொண்ட இந்த புத்தகத் திருவிழாவில் லட்சக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. ரூ.10 முதல் ரூ.5 ஆயிரம் மதிப்பு கொண்ட புத்தகங்கள் இங்கு காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன. சிறுவர்கள் விரும்பும் வண்ணம் தீட்டுதல் புத்தகங்கள், சிறுகதைகள், பெண்கள் விரும்பும் சமையல் குறிப்புகள், கோலப் புத்தகங்கள், புத்தக ஆர்வலர்கள் விரும் பும் விதங்களில் பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள், ஆன்மிக புத்தகங்கள் என பலவும் இங்கு இடம்பெற்றுள்ளன.

தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த புத்தகத் திரு விழாவில், அரியலூர் மட்டுமின்றி பிற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களும் வந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.

தினந்தோறும் மாலை பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.

புத்தகத்திருவிழா தொடங்கிய 6 நாட்களில் ரூ.1 கோடிக்கும் மேல் புத்தகங்கள் விற்பனையாகி யுள்ளன. இதனால், புத்தக பதிப்பகத்தாரும், விற்பனையாளர் களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என விழாக் குழுவினர் தெரிவித் துள்ளனர்.

கரூர் புத்தகத் திருவிழா

பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 3-வது கரூர் புத்தகத் திருவிழா கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இதில் 50-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் ஏராளமான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

புத்தகத் திருவிழாவையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட திறனாய்வுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 21-ம் தேதி பரிசுகள் வழங்கினார்.

புத்தகத் திருவிழாவில், கரூரைச் சேர்ந்த படைப்பாளிகளுக் கென 7-வது அரங்கம் ஒதுக்கப் பட்டுள்ளது. இதில், கரூரைச் சேர்ந்த படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை விற்பனைக்கு வைத்துள்ளனர்.

புத்தகத் திருவிழாவைக் காண கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நாள்தோறும் வருகை தருகின்றனர். புத்தகத் திருவிழாவில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு குலுக்கல் முறையில் நாள் தோறும் புத்தகங்கள் பரிசளிக்கப் படுகின்றன. காலை 11 மணி முதல் இரவு 9.30 வரை நடைபெறுகிறது. அரங்கம் எண் 6-ல் இந்து தமிழ் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

புத்தகத் திருவிழா நாளை மறுநாள் (ஜூலை 28) நிறைவு பெறுவதையொட்டி, அன்று மாலை 6 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிறது. இதில், கரூர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி, அரவக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x