

அது எப்படி? எட்டயபுரத்தில் மட்டும் ஒருத்திக்கு நெருப்பை சுமந்த கருப்பை? அதுகூட சாத்தியம்தான். ஆனால் இது எப்படி.? ஏகாதிபத்திய எரிமலையை ஒரு தீக்குச்சி சுட்டதே... ஒரு வீரிய விதை முளைக்கும்போதே பூமியை ஜெயிக்கிறதே. அப்படித்தான் அது... பாரதி.. உன் பேனா தமிழ்த் தாயின் கூந்தலுக்குச் சிக்கெடுத்தது, கிழிசல் கோட்டு கவிதா தேவிக்குப் பீதாம்பரமானது” என்கிறார் வைரமுத்து.
ஆம்... தமிழ் நிலத்தில் வீரம் விதைத்த சொல் பாரதி. மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். பாரதியைக் கொண்டாடாமல் புத்தகத் திருவிழாவா?
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் சார்பில் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் `பாரதி யார்?’ என்கிற, மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்று நாடகம் நடைபெற்றது.
சென்னை எஸ்.பி. கிரியேஷன்ஸ் தயாரித்து வழங்கிய இந்த நாடகத்தை இசைக்கவி ரமணன் இயக்கி, பாரதியாராக நடித்திருந்தார். பாரதியாரின் பத்து வயதிலிருந்து, அவரது வாழ்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களைத் தொகுத்து அளித்திருந்தனர். காசியில் இருந்த பாரதியார், எட்டயபுர மகாராஜாவின் அழைப்பால் எட்டயபுரம் வந்து வாழ்ந்த வாழ்க்கை, பின்னர் சுதேசமித்திரன் பத்திரிகையில் பணியாற்றியது, சென்னை வாழ்க்கை, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு, தேசபக்தி, தேசத் தலைவர்களுடனான சந்திப்புகள், கிருஷ்ணமாச்சார் உதவியுடன் புதுச்சேரியில் வாழ்ந்தது, வ.உ.சிதம்பரம் பிள்ளை மற்றும் சுப்ரமணிய சிவாவுடனான நட்பு மற்றும் அவர்கள் சிறையில் இருந்தபோது பாரதியார், மனைவி செல்லம்மாவுடன் சென்று உரையாடிய தருணம், பாரதியாரின் வறுமையான வாழ்க்கை, பாரதி-பாரதிதாசன் சந்திப்பு ஆகியவை நாடகத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தன.
பெண் விடுதலை, பெண்கள் முன்னேற்றம் குறித்து பாரதியார் சிந்திக்க உந்துதலாக இருந்த நிவேதிதா அம்மையார்-பாரதியார் சந்திப்பு காட்சி பரவசப்படுத்தியது. செல்லம்மாவாக நடித்திருந்த தர்மா ராமன், சிறந்த நடிப்பில் அசத்தினார். பாரதியார் மீதான காதல், அவரது பாட்டில் லயிப்பது, பாரதியாரின் செயல்களால், ஆச்சாரங்களை இழந்து தவிப்பது, கொடிய வறுமையின் பிடியில் சிக்கியது என, சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் தர்மா ராமன்.
பாரதியாரின் முக்கியமான காவியம் பாஞ்சாலி சபதம். அது, யதுகிரியின் நாட்குறிப்புகளாலேயே கிடைத்தது.
இந்த நாடகத்திலும் யதுகிரியின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்த சம்பவமும் நினைவுகூரப்பட்டது. பாரதியின் பாஞ்சாலி சபதத்தில், கெளரவர் அரங்கில் திரௌபதி பேசிய வசனத்தைப்பேசி, ஒரு நிமிடம் அரங்கை ஸ்தம்பிக்க வைத்தார் யதுகிரியாக நடித்தவர்.
ஏறத்தாழ 30-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த நாடகத்தில் நடித்திருந்தனர். இசை, நாட்டிய நாடகமாக இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. பாரதியின் முக்கியமான பாடல்கள், எழுதப்பட்ட வருடம், உருவானதன் பின்புலமும் நாடகத்தில் குறிப்பிடப்பட்டு, காட்சிபடுத்தப்பட்டன. நாடகத்தில் பாரதியின் `கும்மியடிப் பெண்ணே, வந்தே மாதரம், ஒடி விளையாடு பாப்பா` உள்ளிட்ட பல பாடல்களுக்கு 4 பெண் குழந்தைகள் அபிநயம் பிடித்து நாட்டியம் ஆடியது பார்வையாளர்களைக் கவர்ந்தது.
`வாழ வேண்டும் என்றால் இதயம் துடிக்க வேண்டும், மனிதன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்றால் இலக்கியம் படைக்க வேண்டும், மரங்களும் பறவைகளும் கவலை கொள்கிறதா, மனிதனுக்கு மட்டும் எங்கிருந்து வருகிறது கவலை, பேச்சுக்குத்தான் பெண் விடுதலை, பெண்கள் பேச்சை யார் கேட்கிறார்கள், தமிழ் இலக்கியம் என்றால், பாரதியின் காலத்துக்குமுன், பின் எதிர்காலத்தில் குறிப்பிடுவார்கள்’ என்றெல்லாம் வசனங்கள் இடம் பெற்றிருந்தன.
பாரதியார் தன் வாழ்வில் கடைப்பிடித்த பெண் உரிமை, தீண்டாமை ஒழிப்பு, பகைவரையும் மன்னிக்கும் குணம், தைரியம் போன்றவற்றைக் குறிப்பிடும் வகையில் எடுத்துக் காட்டும் காட்சிகள் நெகிழ்ச்சியுறச் செய்தன.
பாரதியாராக நடித்திருந்த ரமணன், மகாகவியாகவே வாழ்ந்திருந்தார். தோற்றத்தில் கம்பீரம், குரலில் உச்சம், கண்களில் கருணை என நவயுக பாரதியாக வலம் வந்தார். பாரதியின் பாடல்களை மேடையில் அவர் பாடி நடித்தபோது, மெய்மறந்து, பின் ஆரவாரம் செய்தனர் பார்வையாளர்கள். குழந்தைகள், இளைஞர்கள், பெரியோர் என அனைத்து வயதினரும் இந்நாடகத்தை ரசித்தனர். பாரதியின் பாடல்களை ரமணண் பாடும் போதெல்லாம், பலரும் சேர்ந்து பாடி மகிழ்ந்தனர். அதேசமயம், குழந்தைகளுக்கு மிகப் பெரிம் அறிமுகமாக அமைந்தது இந்த நாடகம்.
“இது போன்ற பல நாடகங்கள் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான், பாரதி போன்ற யுகத் தலைவர் குறித்து, வரும் தலைமுறை தெரிந்துகொள்ளும்” என்று வேண்டுகோள் விடுத்தனர் பார்வையாளர்கள். நாடகத்தில் நாட்டியமாடிய நூதனா, சஞ்சனா, ஸ்ரீஜா, ஸ்ரேயா, கனிஷ்கா, இவர்களுக்கு பயிற்சி கொடுத்ததுடன், யதுகிரி கதாபாத்திரத்தில் நடித்த பிரியங்கா ரகுராமன், இசையமைத்த பரத்வாஜ் ஆகியோரை பார்வையாளர்கள் வெகுவாகப் பாராட்டினர்.