அரசு மழலையர் வகுப்பில் 51 ஆயிரம் குழந்தைகள் சேர்ப்பு; மேலும் 3 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த திட்டம்

அரசு மழலையர் வகுப்பில் 51 ஆயிரம் குழந்தைகள் சேர்ப்பு; மேலும் 3 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்த திட்டம்
Updated on
2 min read

சி.பிரதாப்

சென்னை

தமிழக அரசு தொடங்கியுள்ள மழலையர் வகுப்புகளில் இந்த ஆண்டு 51 ஆயிரம் குழந்தைகள் சேர்ந்துள்ளனர். அடுத்தகட்டமாக 3 ஆயிரம் பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை களை அரசு எடுத்துவருகிறது. அதே சமயம், ஆங்கிலக் கல்வி மீதான மோகத்தில், பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு இரண்டரை வயது ஆனதும் தனியார் மழலையர் பள்ளிகளில் (கிண்டர் கார்டன்) சேர்க்கும் போக்கு அதிகரித்து வந்தது. அந்த குழந்தைகள் தொடர்ந்து அதே பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்வதால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துகொண்டே வந்தது.

இதை தவிர்க்கும் விதமாக, அரசுப் பள்ளிகளில் மாண்டிசோரி கல்விமுறையில் மழலையர் வகுப்பு கள் தொடங்க கடந்த ஆண்டு செப்டம்பரில் அரசு முடிவு செய்தது. ரூ.7.73 கோடியில் முதல்கட்டமாக அரசு நடுநிலைப் பள்ளி வளாகங் களில் இயங்கும் 2,381 அங்கன் வாடிகளில் மழலையர் வகுப்பு கள் கடந்த ஜனவரி 21-ம் தேதி தொடங்கப்பட்டன. 3-4 வயது குழந்தைகளை எல்கேஜி வகுப்பி லும், 4-5 வயது குழந்தைகளை யுகேஜி வகுப்பிலும் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. மழலையர் வகுப்புகளுக்கு பாடம் நடத்த, அரசு தொடக்கப் பள்ளிகளில் உபரியாக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மழலையர் வகுப்புகள் காலை 9.30 மணி முதல் மதியம் 3.45 மணி வரை நடைபெறும். இங்கு சேர்ந்து உள்ள குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்கள், புத்தகப்பை வழங்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்புக் கும் ஒரு கற்றல் கருவி பெட்டி தரப்பட்டுள்ளது. அதன்மூலமாக ஆசிரியர்கள் தினமும் 2 மணி நேரம் பாடம் நடத்துகின்றனர். அது செயல்முறைக் கல்வியாகவே இருக்கும். இதர நேரங்களில் விளையாட்டு போன்ற தனித்திறன் சார்ந்த அம்சங்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மதிய உணவுக்கு பிறகு குழந்தைகள் தூங்கவும் நேரம் ஒதுக்கப்படுகிறது. குழந்தைக ளுக்கு விரைவில் இலவச சீருடை கள், காலணிகள் வழங்கப்பட உள்ளன. இதுதவிர, மழலையர் வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி பயிற்சி வழங்கப்படுகிறது.

இதையடுத்து, பெற்றோர் பலரும் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை அரசு மழலையர் வகுப்புகளில் சேர்த்து வருகின்றனர். நடப்பு ஆண்டு இதுவரை 51 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

புதிதாக திட்டம்

அரசுப் பள்ளி வளாகங்களில் இயங்கும் மற்ற 3 ஆயிரம் அங்கன்வாடிகளிலும் படிப்படியாக மழலையர் வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மையங்களில் படிக்கும் 60 ஆயிரம் குழந்தைகள் அப்படியே மழலையர் வகுப்புகளில் சேர்க்கப்படுவார்கள்.

இதற்கான கருத்துருக்கள், தேவையான கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. விரைவில் தமிழக அரசிடம் ஒப்புதல் பெற்று திட்டம் விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் ஏழை மக்களும் தனியார் பள்ளியை நோக்கிச் செல்லும் போக்கு மாறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in