Published : 25 Jul 2019 08:51 PM
Last Updated : 25 Jul 2019 08:51 PM

அத்திவரதர் வைபவ ஏற்பாடுகள் குறித்த 5 வழக்குகள்: அரசு விளக்கத்தை ஏற்று தீர்ப்பு ஒத்திவைப்பு

அத்திவரதர் வைபவம் நடக்கும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட 5 வழக்குகள் மீதான விசாரணையில் அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஜூலை.29-க்கு ஒத்திவைத்தது.

அத்திவரதர் வைபவத்திற்காக காஞ்சிபுரம் வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, மத்திய துணை ராணுவ பாதுகாப்பு, வரதராஜர் சன்னதி திறப்பு, உயிரிழந்தவர்களுக்கு 15 லட்ச ரூபாய் இழப்பீடு, அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு அன்றாட வாழ்க்கை பாதிக்காத வகையில் நடவடிக்கை ஆகிய கோரிக்கைகளுடன்  5 வழக்குகள் தொடரப்பட்டன. அவை இன்று நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, பதிலளித்தார், அவரது வாதம்: “இதுவரை அதிகபட்சமாக ஜூலை 18-ம் தேதி மட்டும் 2.75 லட்சம் பக்தர்களும், ஜூலை 13-ம் தேதி 2.50 லட்சத்தினரும் தரிசித்துள்ளனர். விழா தொடங்கிய ஜூலை 1 முதல் நேற்று வரை 34 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர். மருத்துவ சிறப்பு முகாம்கள், ஆம்புலன்சுகள், தொற்றுநோய் தடுப்பு முகாம்கள் ஆகியவை மூலம் இதுவரை 32 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

தரிசனத்திற்கு வந்த 6 பேர் மரணமடைந்துள்ளதற்கு  கூட்ட நெரிசல் காரணமல்ல, ஏற்கெனவே உடல் நலக்குறைவு உள்ள 6 பேரும் அத்திவரதரை தரிசித்துவிட்டு வந்த பின்னர்தான் மரணமடைந்துள்ளனர்.  

2 ஐஜி தலைமையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீ தடுப்பு பணிகளில் 250 பேரும், சுகாதார பணிகளில் 1200 துப்புரவு பணியாளர்களும் ஈடுபட்டுள்ளனர். ஏப்ரல் 3-ம் தேதி தொடங்கி ஆய்வுகூட்டங்கள், ஒவ்வொரு படிநிலையில் நடைபெற்று வருகிறது,  ஜூலை 20-ல் முதல்வர் தலைமையிலும் ஆய்வு கூட்டம் நடந்தது.

சக்கர நாற்காலிகள், உணவு, பழரசம், தண்ணீர், அன்னதானம், கூடுதல் ரயில்கள் மற்றும் பேருந்துகள் வசதி, இருசக்கர வாகன நிறுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு வீதி மட்டுமே என நெரிசல் அதிகமாகும் பகுதியாக  குறிக்கப்பட்டுள்ளது.
வரிசையில் நின்ற இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் தரிசித்துவிட்டு வெளியில் வந்துவிடலாம் என்பதால், ஒரு மணி நேரத்திற்கு 9 ஆயிரம் பேர் வீதம் தரிசித்து வருகின்றனர்.

மூலவர் சன்னதியை ஜூலை 18 வரை அனைவரும் தரிசிக்க அனுமதிக்கப்பட்டது. அதன்பின்னர் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்டது. தற்போது நடைமுறையை மீண்டும் மாற்றுவது குறித்து அரசு மற்றும் காவல் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்”. என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதிகள் 2.75 லட்சம் மக்கள் கூடுகின்ற இடத்தில் 250 குடும்பங்களின் வாகனங்களை அனுமதிக்க சொல்கிறீர்களா? என மனுதாரர்களிடம் கேள்வி எழுப்பினர்.

மேலும், லட்சக்கணக்கான மக்கள் கூடுகிற இடத்தில் எப்படி ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென்பதை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும்தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்ததுடன், சிஐஎஸ்எஃப்(CISF), பிஎஸ்எஃப்(BSF) அமைப்புகள் எல்லா இடங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காக அமைக்கப்படவில்லை, எனக் கூறி வழக்கின் தீர்ப்பை ஜூலை 29-க்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x