

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வலியுறுத்துவோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''இன்றைய வாழ்க்கை முறையில் கார்பன் மோனாக்ஸைடு வெளியாவதால் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடாகி வருகிறது. இதனால் மனிதர்களுக்கு மட்டுமின்றி, இயற்கைக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் கடல் நீர் மட்டம் உயரும் அபாயமும் உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டுதான் தமிழக அரசு, மின்சார பேட்டரிகளைக் கொண்ட வாகனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. முதல்வர் தலைமைச் செயலகத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா காரை அறிமுகப்படுத்தினார்.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில், சென்னையில்தான் எலெக்ட்ரிக் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வருங்காலத்தில் இந்தியா முழுவதும் மின்மயமாக்கப்பட்ட, பேட்டரியால் இயங்கக்கூடிய வாகனங்கள் இயங்கும் நிலை உருவாகும்.
எலெக்ட்ரிக் கார் நிறுவனங்களுக்கு வரிக் குறைப்பு செய்யவேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது. அவற்றுக்கான ஜிஎஸ்டியை 12%-ல் இருந்து 5% ஆக குறைக்க வேண்டும். சார்ஜர் ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12% ஆகக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிப்போம்.
கடந்த காலங்களில் பல பொருட்களுக்கு நமது அழுத்தத்தின் காரணமாகவே ஜிஎஸ்டி வரி குறைப்பும் வரி விலக்கும் அளிக்கப்பட்டது'' என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.