Published : 25 Jul 2019 04:30 PM
Last Updated : 25 Jul 2019 04:30 PM

இலவசப் பேருந்து ரத்து, கல்விக் கட்டணம் கடும் உயர்வு: புதுச்சேரி பல்கலை. மாணவிகள் தொடர் உண்ணாவிரதம்

மாணவ, மாணவிகள் போராட்டம்

புதுச்சேரி

இலவச பேருந்து ரத்து, கல்வி கட்டணம் கடும் உயர்வால் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் தொடர் உண்ணாவிரதத்தை இன்று தொடங்கினர்.

புதுச்சேரி பல்கலைக்கழகம் கடந்த 1985-ல் தொடங்கப்பட்டபோது நிலம் கொடுத்தோர் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தோர் படிக்க 25 சதவீத இட ஒதுக்கீடு கோரப்பட்டது. புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் 66-க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 18 பாடப்பிரிவுகளில் மட்டுமே புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு  25 சதவீதம் ஒதுக்கீடு கோரி போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை.

கடந்த கல்வியாண்டுக்கான அறிவிப்பிலும் இட ஒதுக்கீடு இல்லை. புதுச்சேரியில் ஆண்டுதோறும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உயர் கல்வி வாய்ப்பைப் பெறுவதற்காகக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவ, மாணவியர் வருவதற்கான இலவசப் பேருந்து முறை ரத்தாகி நடப்பு கல்வியாண்டு முதல் கட்டணம் செமஸ்டருக்கு ரூ. 4 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கல்விக் கட்டணம் அனைத்து பாடப்பிரிவுகளிலும் 83 சதவீதம் சராசரியாக உயர்ந்துள்ளது. இதனால் தொடர் பாதிப்பில் புதுச்சேரி மாணவ, மாணவிகள் உள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி பல்கலைகழகத்தின் மாணவர் பேரவை துணைத்தலைவர் சோனிமா மற்றும் செயற்குழு உறுப்பினர் பாரதி தொடர் உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கடந்த கல்வி ஆண்டு இறுதியில் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து மாணவர் பேரவை மற்றும் பல்கலைக்கழக அனைத்து மாணவர் அமைப்புகளும் இணைந்து தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.  

நடப்புக் கல்வியாண்டு தொடங்கியது முதல் தொடர்ந்து பல மனுக்களை மாணவர் பேரவை சார்பாகவும் மாணவர் அமைப்புகள் சார்பாகவும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கொடுக்கப்பட்டது. மாணவர்களின் கோரிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்காததைத் தொடர்ந்து காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை புதுவை பல்கலைக்கழக மாணவர் பேரவை சார்பில் மாணவ, மாணவிகள் தொடங்கியுள்ளனர்.

-செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x