

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு எழுந்தருளியுள்ள அத்திவரதரை, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் இன்று (ஜூலை 25) தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் இருந்து அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 40 ஆண்டுகளுக்கு பிறகு அவர் எழுந்தருளி இருப்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். சில நாட்களாக தினமும் ஒரு லட்சத்தையும் தாண்டி பக்தர்கள் வருகின்றனர்.
கடந்த 12-ம் தேதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடும்பத்துடன் வந்து அத்திவரதரைச் தரிசனம் செய்தார். அவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் அமைச்சர் உதயகுமார் ஆகியோரும் காஞ்சிபுரம் வந்து, அத்திவரதரைத் தரிசித்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜூலை 24) அத்திவரதரைத் தரிசனம் செய்தார்.
இந்நிலையில் 25-ம் நாளான இன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு அத்திவரதரின் சிறப்புகள் குறித்து அர்ச்சகர்கள் விளக்கினர். இதேபோல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், ஐசரி கணேஷ், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோரும் அத்திவரதரைத் தரிசித்தனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின் வசதிக்காகக் கூடுதல் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தெற்கு மாட வீதி முழுவதும் மற்றும் வடக்கு மாட வீதியில் குறிப்பிட்ட அளவுக்கும் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
வரிசையில் வரும் பொதுமக்களுக்கு கிழக்கு ராஜகோபுரம் பகுதியில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் நிற்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் வரிசையில் வருபவர்கள் அமர்ந்து ஓய்வு எடுக்க மணல் கொட்டப்பட்டுள்ளது. தேவைக்கு தகுந்தாற்போல் நாற்காலிகளும் போடப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு நீர்மோர், தேநீர், பிஸ்கட் வழங்கப்படுகின்றன.
கடந்த 24 நாட்களில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், அத்திவரதரைத் தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.