

ஈரோடு
பெருந்துறை சிப்காட் பகுதியை ஒட்டியுள்ள ஓடையக்காட்டூர் குளத்தில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், சாயக்கழிவு கலந்த மண்ணை அகற்றும் பணி தொடங்கியது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் அருகே உள்ள ஓடையக்காட்டூர் குளத்தில் தேங்கும் நீரை 2007-ம் ஆண்டு வரை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறிய சாயக்கழிவு நீர், இந்த ஓடையில் கலந்தது. இதனால் ஓடை முழுவதும், சாயக்கழிவு தங்கியது. கழிவுநீரை வெளியேற்றிய சாய ஆலை உரிமையாளர்களுக்கு, ரூ 11 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. சாய ஆலை உரிமையாளர்கள் அபராதத் தொகையை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்குச் செலுத்தினர்.
இந்நிலையில் குளத்தில் தண்ணீர் வற்றாமலே இருந்து வந்ததால், சாயக்கழிவு அகற்றப்படாமலே இருந்தது. குளத்து நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை தொடர்ந்து வந்தது. இந்நிலையில், தற்போது குளம் வறண்ட நிலையில் உள்ளதால், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சரவணக்குமார் இதனை அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரியிருந்தார். இதனையேற்று ஆட்சியர் சி.கதிரவன், 17 ஏக்கர் பரப்பளவில், ஒரு அடி அளவில் குளத்தில் தேங்கியிருக்கும் சாயக்கழிவுகளை அகற்ற உத்தரவிட்டார். இதற்காக ரூ.11 லட்சம் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குளத்தில் தூர்வாரும் பணி இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. குளத்தில் உள்ள சாயக்கழிவுகளை அகற்றி விட்டால், இனிமேல் தேங்கும் தண்ணீரால், சிப்காட் பகுதியில் நிலத்தடி மேம்படும் என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
-கோவிந்தராஜ்