Published : 25 Jul 2019 03:14 PM
Last Updated : 25 Jul 2019 03:14 PM

தமிழக வளர்ச்சிக்கு முற்றிலும் எதிரானவர் ஸ்டாலின்: தமிழிசை விமர்சனம்

ஸ்டாலின் பொய் சொல்லியே அரசியல் நடத்துகிறார். அவர் தமிழக வளர்ச்சிக்கு முற்றிலும் எதிரானவர் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களை இன்று சந்தித்துப் பேசிய அவர், ''ஸ்டாலின் நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது ஏதோ சமூக நீதிக்கு எதிரானது என்பதுபோலவும் பாஜவுக்கும் மோடி அரசுக்கும் சமூக நீதியைப் பற்றிய அக்கறையே இல்லை என்பதைப் போலவும் மக்களின் மனதில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். இது மிகத் தவறானது. 

எல்லா மக்களும் மிக ஒற்றுமையாக, தங்களுக்குக் கிடைக்கவேண்டிய இட ஒதுக்கீடு கிடைக்கிறது; ஏழ்மையில் வாழும் மற்றவர்களுக்கும் இது கிடைக்கவேண்டும் என்று நினைக்கின்றனர். இந்த சூழ்நிலையில் வேண்டுமென்றே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில்,ஸ்டாலின் தேடித் தேடி இத்தகைய பதிவுகளை இட்டு வருகிறார். 

தமிழகத்தில் தீர்க்கவேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ உள்ளன. இந்நிலையில் மக்கள் ஒப்புக்கொண்ட ஒன்றை, ஸ்டாலின் சமூக நீதிக்கு எதிரான செயல் என்று சித்தரிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மத்திய அரசின் நல்ல திட்டங்களைத் திசை திருப்புகிறார் ஸ்டாலின்.

அவர் பொய் சொல்லியே அரசியல் நடத்துகிறார். தமிழக வளர்ச்சிக்கு முற்றிலும் எதிரானவர். மொழி, இனம், மதம், இட ஒதுக்கீடு ஆகியவற்றை வைத்துப் பிரச்சினை செய்கிறார். தொடர்ந்து இதேபோல பேசிக்கொண்டிருக்கிறார்.

திமுக தலைமையிலான திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கூட்டணி தமிழக வளர்ச்சிக்கு எதிரான கூட்டணி. தமிழ்நாடு அமைதியாக இருக்கக்கூடாது என்று நினைக்கும் கூட்டணி'' என்று  தமிழிசை தெரிவித்தார்.    
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x