Published : 25 Jul 2019 02:54 PM
Last Updated : 25 Jul 2019 02:54 PM

மாறுபட்ட கருத்து கூறுபவர்கள் தேச விரோதிகளோ, பயங்கரவாதிகளோ அல்ல: வீரமணி

கி.வீரமணி: கோப்புப்படம்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வது நியாயமா என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2014 இல் வந்தபோதும், 2019 தேர்தலில் ஆட்சியமைத்த போதும் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை மறந்துவிட்டது.
அதில் முக்கியமானவை
1. குறைந்த அரசு; நிறைந்த ஆளுமை
2. வெளிப்படையான திறந்த நிர்வாகம்
இந்த இரண்டும் கடைபிடிக்கப்படுகிறதா?

எல்லாம் அவசரக் கோலம்!
முக்கிய சட்டத் திருத்தங்கள் விரிவாக விவாதிக்கப்படாமலேயே - நாடாளுமன்ற நிலைக் குழு, பொறுப்புக் குழு, செலக்ட் கமிட்டி போன்றவற்றால் சிறிதும் விவாதிக்கப்படவே வாய்ப்பின்றி, அவசரக்கோலம், அள்ளித் தெளித்த கதை. ஒப்புக்கு சில எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பேச வாய்ப்பளித்து, குரல் வாக்கெடுப்பின் மூலமே அதிரடியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன!
அனைத்தும் ஆர்எஸ்எஸ் அடிப்படையில், வேக வேகமாகச் செயல்கள் ஒற்றைத் தத்துவ இலக்கு நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளன. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மின்னல் வேகத்தில் மாநில - மனித உரிமைப் பறிப்புப் பணிகள் நடைபெறுகின்றன!

தகவல் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதா?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காங்கிரஸ் - திமுக இடம்பெற்று, அதன் சாதனை மகுடத்தில் முத்தாக ஜொலித்த மத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்ற ஜனநாயகக் காவல் அரணின் சுதந்திரத்தையும் பறிக்கும் அளவுக்கு, மோடி அரசு அவசரமாக அடிப்படையை மாற்றிடும் இரண்டு திருத்தங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றுகின்றது.

மத்திய அரசு இயந்திரங்களின் ஊழல்களையும், கோளாறுகளையும், மெத்தனத்தையும் ஒருதலைபட்சமான சார்பு நிலையையும் சுட்டிக்காட்டி, பரிகாரம் தேட இந்தச் சட்டம் சரியான வாய்ப்பாக, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்குக் குறைந்த செலவில் நீதி கிடைக்க வழிவகை செய்து வந்தது.
யாருக்கும் அஞ்சாமல் தகவல் ஆணையம் சுதந்திரத்தோடு செயல்பட்டு வந்தது. அதனை இந்த சட்டத் திருத்தங்கள் செயலற்றதாக ஆக்குவது போல  இரண்டு முக்கிய திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது.

1. மத்தியில் முதன்மைத் தகவல் ஆணையர், மாநிலங்களில் தகவல் ஆணையர்களின் பணிக்காலம், ஊதியம் இரண்டையும் நிர்ணயிக்கும் உரிமையை மத்திய அரசுக்கு வழங்குகிறது.
மத்திய அரசின் தயவில், கண் அசைவுக்கும், நல்லெண்ணத்தினையும், அதனை நம்பியே வாழும் நிலை வந்தால், இவர்கள் துணிச்சலுடன், ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து செயல்பட முடியுமா? 

மாநிலங்களே கூடாது!

மாநிலங்களே - கூட்டாட்சியே கூடாது என்ற கொள்கை ஆர்எஸ்எஸ் கொள்கை; ஒற்றை ஆட்சி தான் இருக்கவேண்டும் என்ற கூட்டாட்சித் தத்துவத்தினை வற்புறுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்துக்கொண்டே, அதனை மீறுவது, டாஸ்மாக் கடைகளில் "குடி குடியைக் கெடுக்கும் - மது உடல்நலத்துக்குக் கேடு" என்ற முகப்பு எழுத்து - எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது, மது வாங்குவதுபோல ஒரு ஆபத்தான - நாட்டு நல, மாநில உரிமை, மனித உரிமைப் பறிப்பு ஆகும்.

இப்படி நாளும் சோதனை மேல் சோதனை! ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே ரேஷன் கார்டு, ஒரே கல்வித் தலைமை நிர்வாக அமைப்பு. எல்லாம் ஒற்றை நபர், ஒற்றைத் தலைமையா? என்ற கேள்விதான் இந்திய மக்கள் தலை மீது தொங்கும் கொடுவாளாக இருக்கிறது.

பெரியார் பூமியே வழிகாட்டவேண்டும்!
நாடு எங்கே போகிறது? தென்னாட்டு விழிப்பு குறிப்பாக தமிழ்நாட்டின் உரிமைக் குரல் இந்தியா முழுவதும் ஓங்கி ஒலித்து, மக்களை விழிப்படையச் செய்யும் பணி அன்றாடப் பெரும் பணியாகியுள்ள கட்டாயம் தமிழ் நிலத்தின்மீது - பெரியார் பூமியை வழிகாட்ட வைக்கத் தூண்டிக் கொண்டே இருக்கிறது.

இதைவிடப் பெரிய கொடுமை நாளும் திட்டமிட்டு நாடாளுமன்றத்தில் விவாதம் அதிகமின்றியே நிறைவேற்றப்பட்ட பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் திருத்தம், பயங்கரவாதத்தை வன்மையாகக் கண்டிப்பதில்  யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல தமிழக மக்கள்.

ஆனால், இச்சட்டம் நிறுவனங்களைக் குறி வைத்ததைத் தாண்டி, தனி நபர்களையும் குறி வைத்துக் கைது செய்ய வாய்ப்புள்ளது.

தடா, பொடா போன்றவற்றை விடவும் கொடூரமாக இருப்பது மிகவும் வேதனையானது, கண்டிக்கத்தக்கது. இதைத் திரும்பப் பெற்று ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். மாறுபட்ட கருத்துக் கூறுபவர்கள் தேச விரோதிகளோ, பயங்கரவாதிகளோ அல்ல",  என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x