Published : 25 Jul 2019 01:39 PM
Last Updated : 25 Jul 2019 01:39 PM

வடதமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை

அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், "தென்மேற்குப் பருவமழை தற்போது கர்நாடகப் பகுதிகளில் தீவிரமாக உள்ளது. தற்போது தமிழகப் பகுதியில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்து வரும் இரு தினங்களுக்கு வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழையைப் பொறுத்தவரையில்  காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புண்டு. சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை ஓரிரு முறை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பாலச்சந்திரன்: கோப்புப்படம்

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 8 செ.மீ. மழையும், காவேரிப்பாக்கத்தில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மேலும், காஞ்சிபுரம் 8 செ.மீ, அண்ணா பல்கலைக்கழகம் 7 செ.மீ., காவேரிப்பாக்கம் 5 செ.மீ., குளப்பாக்கம், செம்பரம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் 4 செ.மீ., பூந்தமல்லி, மதுராந்தகம், உதகமண்டலம், திருப்பத்தூர், ஆம்பூர், வந்தவாசி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கரூர், கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. 

தென்மேற்குப் பருவமழையைப் பொறுத்தவரையில் ஜூன் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில், தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு, 81 மி.மீ. இந்தக் காலகட்டத்தின் இயல்பு அளவு 114 மி.மீ. இது இயல்பை விட 29 சதவீதம் குறைவு” என பாலச்சந்திரன் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x