கோத்தகிரியில் சோகம்: காட்டெருமை முட்டித் தாக்கியதில் பெண் பலி

பேபியின் உடல்
பேபியின் உடல்
Updated on
1 min read

ஆர்.டி.சிவசங்கர்

கோத்தகிரி அருகே தேயிலை பறிக்கச் சென்ற பெண் ஒருவரை காட்டெருமை கொடூரமாக முட்டித் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் பகுதியைச் சேர்ந்த விவசாயி பேபி (42). இவருக்குத் திருமணம் ஆகவில்லை. இவருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளது.

இன்று (வியாழக்கிழமை) காலை, பேபி தேயிலை பறிக்க தனது தோட்டத்துக்குச் சென்றார். வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் தேயிலை பறித்துக் கொண்டிருந்தபோது, புதரில் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று திடீரென அவரது மார்புப் பகுதியில் கொடூரமாக முட்டியது. 

இதில், நிலைகுலைந்த பேபி அங்கேயே சாய்ந்து விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் அங்கு ஓடி வந்தனர். உடனடியாக அவரை மீட்டு கோத்தகிரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கோத்தகிரி சரகர் ஸ்ரீனிவாசன், தமிழக அரசின் முதற்கட்ட நிவாரணத் தொகையாக ரூ.50,000 பணத்தை பேபியின் உறவினர்களிடம் வழங்கினார். இதுகுறித்து கோத்தகிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in