

மதுரை
நடிகர் சந்தானம் நடித்த ‘அக்யூஸ்டு நம்பர் ஒன்’ என்ற புதிய படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் வசனங்கள் இடம்பெற் றிருப்பதால், அப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, ரவி, குழந்தைசாமி உள்ளிட்டோர் நேற்று மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்ப தாவது: பிராமண சமுதாய பெண்களை இழிவுபடுத்தும் வகையில், நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘அக்யூஸ்டு நம்பர் ஒன்’ என்ற புதிய திரைப்படத்தில் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இப்படம் ஜூலை 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதை தடை செய்ய வேண்டும். சமூகத்தில் வேண்டுமென்றே பதற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுபோன்று ஒரு சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், அவர்களின் பழக் கவழக்கங்களை இழிவுபடுத்தும் வகையில் திரைப்படம் எடுப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எனவே, இப்படத்தைத் தடை செய்வதோடு, அதில் நடித்த நடிகர் சந்தானம் உள்ளிட்டோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.