

புதுச்சேரி
ஹோட்டலில் ‘சிக்கன் ஷவர்மா’ சாப்பிட்ட ஜிப்மர் மாணவர்கள் 11 பேருக்கு வாந்தி - மயக்கம் ஏற்பட்டது. அவர்களின் புகாரின் பேரில் இரு நாட்களுக்குப் பிறகு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து தாமதமாக உணவுத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு கடையை மூடி நோட்டீஸ் ஒட்டினர்.
புதுச்சேரி ஜிப்மர் எதிரே, ஆக்டோ போர்க் தனியார் ஹோட் டல் உள்ளது. கடந்த 22-ம் தேதி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 11 பேர் அந்த ஹோட்டலில் இருந்து ஆன்லைன் மூலம் சிக்கன் ஷவர்மா வாங்கி சாப்பிட்டனர்.
சாப்பிட்ட பின்னர் அவர்க ளுக்கு வயிற்றுவலி மற்றும் வயிற் றுப்போக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். இதுபற்றி தன்வந் திரி காவல் நிலையத்தில் பாதிக்கப் பட்டவர்கள் புகார் அளித்தனர். ஆனால், தன்வந்தரி நகர் போலீ ஸார் வழக்குப் பதியவில்லை. மருத்துவ மாணவர்கள் இதுதொடர் பாக வழக்குப்பதிவு செய்வதில் உறுதியாக இருந்தனர். அத்துடன் சட்டரீதியான நடவடிக்கை தேவை என்றும் குறிப்பிட்டனர். அதைத்தொடர்ந்து தன்வந்தரி போலீஸார் அந்த ஹோட்டல் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
தாமதமாக ஆய்வு
இச்சம்பவம் நடந்தது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அந்த ஹோட் டலின் மீது எந்தவித ஆய்வும் நடத்தவில்லை. போலீஸார் வழக்குப் பதிவு செய்ததால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தன்ராஜ் தனது துறை அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள உணவு மாதிரிகள், உணவு பொருட்களுக்கு பயன் படும் மசாலாக்களை பரிசோத னைக்கு எடுத்து சென்றனர். இரு நாட்களுக்கு பிறகு ஆய்வு நடந்த தால் கடையில் எவ்வித பொருள் களும் அதிகளவில் இல்லை. அதைத்தொடர்ந்து கடையை மூடி நோட்டீஸ் ஒட்டினார்.
அப்போது அதிகாரி தன்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஹோட்டலில் சாப்பிட்டவர்கள் பாதிக்கப்பட்டதாக புகார் வந்ததைத் தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டுள்ளோம். முடிவில் தவறு நடப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.
சுகாதாரமின்றி தயாராகும் ‘ஷவர்மா’
பொதுமக்கள் தரப்பில் இதுபற்றி கூறுகையில், “புதுச்சேரி யில் சாலையோர உணவகங்களில் அதிகளவில் ‘சிக்கன் ஷவர்மா’ விற்பனை நடக்கிறது. பெரிய ஹோட்டல் நிறுவனங்கள் கூட, சாலைகளில் திறந்த வெளிகளில் சுகாதாரமின்றி இவற்றை விற்பனை செய்கின்றன. நகராட்சி அதிகாரிகளும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஜிப்மர் மாணவர்கள் பாதிக்கப்பட்ட அன்றே ஆய்வு மேற்கொண்டு இருந்தால் அன்றைய தினம் பயன்படுத்தப்பட்ட உணவு வகைகளை எடுத்திருக்கலாம். அதன் மூலம் பாதிப்புக்கான காரணமும் தெரிய வந்திருக்கும்” என்று குறிப்பிடுகின்றனர்.
தரமற்ற உணவு தயாரித்தால் சீல்
இவ்விவகாரம் தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் புதுச்சேரி வருகின்றனர். உணவகங்கள், சாலையோர உணவு விற்பனை செய்யும் இடங்களில் நகராட்சி அதிகாரிகளுடன், உணவுத்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்துவார்கள். இதுதொடர்பாக புகார்கள் இருந்தால் நகராட்சி, உணவுத்துறையில் தெரிவிக் கலாம். சோதனையின் போது உணவு தரமற்று இருந்தால் கண்டிப் பாக கடைக்கு சீல் வைக்கப்படும். உணவு விற்பனைக்கு உரிமம் அவசியம். அது இல்லாதோர் மீதும் நடவடிக்கையுண்டு” என்று தெரிவித்தனர்.
ஜிப்மர் மருத்து வர்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘சிக்கன் ஷவர்மா’ சாப்பிட்டு உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அவ்வப்போது சிலர் வருகின்றனர். இவர்களுக்கு உடல் நலபாதிப்பு சீராக 3 முதல் 7 நாட்களாகும். உணவகங்களில் சாப்பிடும் முன்பு அது உடல் நலனுக்கு உகந்ததா என்பதை ஆராய்ந்து சாப்பிடுவது அவசியம் என்று குறிப்பிட்டனர்.