

வீ.தமிழன்பன்
காரைக்கால்
புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க் கையில், பிராந்திய இடஒதுக்கீட்டு முறையை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சிகள் மேற்கொள் ளப்படுவதாக காரைக்கால் பிராந் திய பெற்றோர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் என நான்கு பிராந்தியங்களை உள்ளடக்கியது. இதில், புதுச்சேரி அரசு உயர்(தொழில்) கல்வியில் காரைக்காலுக்கு 18 சதவீதம், மாகே பிராந்தியத்துக்கு 4 சதவீதம், ஏனாம் பிராந்தியத்துக்கு 3 சதவீதம், மாநிலம் முழுமைக்கும் 75 சதவீதம் என பிராந்திய இட ஒதுக்கீட்டு முறை கடந்த 2006-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பின்னர், 2010-ம் ஆண்டு புதுச்சேரி அரசு, 75 சதவீத இடஒதுக்கீட்டை புதுச்சேரி பிராந்தியத்துக்கு மட்டுமான ஒதுக்கீடாக மாற்றி அறிவித்தது.
இதற்கிடையே, புதுச்சேரியைச் சேர்ந்த பெற்றோர்கள், மாணவர் கள் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பிராந்திய இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், இடஒதுக்கீடு வழங்கப் பட்டது சரிதான் என்றும், 75 சதவீத ஒதுக்கீட்டை புதுச்சேரி பிராந்தியத்துக்கு மட்டுமான ஒதுக்கீடாக மாற்றி அறிவித்தது செல்லாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தால் உறுதி செய்யப் பட்ட பிராந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என ஒவ்வொரு கல்வியாண்டு தொடக்கத்தின்போதும், புதுச்சேரி பிராந்தியத்தைச் சேர்ந்த பெரும்பாலான எம்எல்ஏக்கள் கட்சி பேதமின்றி வலியுறுத்துவதையும், அரசுக்கு நெருக்கடி தருவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தற்போதும் அத்தகைய குரல் வலுவாக எழுப்பப்பட்டு வருகிறது. இது காரைக்கால் மாணவர்கள், பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மேலும், இந்த அழுத்தம் காரணமாக மருத்துவ மாணவர் சேர்க்கையில், பிராந்திய இடஒதுக்கீட்டு முறையை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், நுணுக்கமான சட்ட அணுகுமுறையுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் தரப்பில் கூறியது:
புதுச்சேரி சென்டாக் அமைப்பு இந்த ஆண்டு தாமதமாக கடந்த 22-ம் தேதி இரவுதான் மருத்துவ தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. நேற்று அதிகாலை வரைவு இடஒதுக்கீட்டுப் பட்டியலை வெளியிட்டது. இப்பட்டியல் காரைக்கால் மாணவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.
மாநிலம் முழுமைக்குமான 75 சதவீத ஒதுக்கீட்டில், உயர் மதிப்பெண் பெற்ற காரைக்கால் மாணவருக்கும் இடமளிக்க வேண் டும். அதை மறுத்து அவரை வலுக்கட் டாயமாக காரைக்காலுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டுப் பிரிவில் தள்ளிவிடக் கூடாது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் 75 சதவீத ஒதுக்கீட்டில், உயர் மதிப்பெண் பெற்ற காரைக்கால் மாணவர்களுக்கு இடமளிக்கப்படவில்லை. இது காரைக்கால் மாணவர்களுக்கு 18 சதவீத பிராந்திய ஒதுக்கீட்டில் கிடைக்கும் இடங்களை குறைக்கும் யுக்தி. இடஒதுக்கீட்டின் நோக்கத்தை சிதைக்க நுணுக்கமான அணுகுமுறைகள் கையாளப்படுவதாக தெரிகிறது. இது உடனடியாகக் களையப்பட வேண்டும். மேலும், 75 சதவீத ஒதுக்கீட்டில் இடங்கள் நிரப்பி முடிக்கப்பட்ட பின்னரே, பிராந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களை நிரப்ப வேண்டும். இதுவே சட்டப்படி முறையானது என்றனர்.
காரைக்கால் யூனியன் பிரதேச போராட்டக்குழு பொதுச் செயலாளர் ஏ.எஸ்.டி.அன்சாரிபாபு கூறியது:
புதுச்சேரியைச் சேர்ந்த பெரும்பாலான எம்எல்ஏக்கள் பிராந்திய இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதும், நீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்புக்கு எதிராக குரல் எழுப்புவதும் கண்டிக்கத்தக்கது. காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த 5 எம்எல்ஏக்களும் இவ்விஷயத்தில் கட்சிப் பாகுபாடின்றி ஒற்றுமையாக செயல்பட்டு, காரைக்காலுக்கான உரிமையை விட்டுவிடாமல் பாதுகாக்க வேண்டும்.
சென்டாக் அமைப்பு மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிராந்திய இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும். பொருளா தாரத்தில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கான இடங்கள், என்ஆர்ஐ-க்கான இடங்கள் ஆகியவற்றிலும் பிராந்திய இட ஒதுக்கீட்டை முறையாக அமல் படுத்த வேண்டும் என்றார்.