

உலகை வெற்றிகொள்ள வேடிக்கைப் பார்க்காதீர்கள்; உற்று கவனியுங்கள். உற்று கவனிப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள்” என்றார் ஆன்மிகச் சொற்பொழிவாளர் சுகி சிவம்.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் சார்பில் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் `நீ, நான், நிஜம்’ என்ற தலைப்பில் பேசினார் சுகி சிவம்.
“ஒருவரைப் பார்க்கும்போது ‘நலமா’ என்று விசாரிக்கிறோம். அதேசமயம், ‘நீங்கள் சமீபத்தில் படித்த புத்தகம் என்ன?’ என்றும் கேட்க வேண்டும். அதுவே அறிவார்ந்த சமூகமாக இருக்கும். ஆனால், தற்போது பெரும்பாலான மக்களிடம் அந்தப் பழக்கமே இல்லை. ஒரு மனிதனின் அறிவை புத்தகத்தில் பதிந்தால், அடுத்தடுத்து படிப்பவர்களை அது சென்றடையும். அறிவைப் பகிர்ந்து கொள்ளும் வழி, புத்தகங்களையும், படித்ததையும் பகிர்ந்து கொள்வதே ஆகும்.
நமது நிலை, வேலை, கடமையை உணராமல், பெரும்பாலான நேரங்களில் தேவையில்லாத விஷயங்களில் ஈடுபடுகிறோம். நாம் யார் என்று உள்ளார்ந்து உணர்ந்தாலே, எத்தனையோ நல்ல காரியங்களில் ஈடுபடலாம். இந்த உலகில் தேவையில்லாத பொருள் என்று எதுவுமே இல்லை. தேவையற்றவர்கள் என்பவர்களும் இங்கு இல்லை. வெற்றிகொள்ள வேடிக்கைப் பார்க்காதீர்கள். உலகை உற்று கவனிப்பவர்களே வெற்றி கொள்கிறார்கள்.
யார், என்ன அதிசயம் செய்தாலும் உடனே நம்பிவிடும் மனோபாவம் நம்மில் நிலவுகிறது . நமக்கு வந்து சேரும் செய்திகளையும் அப்படியே நம்பி விடுகிறோம். இதிலிருந்து விலகி, விழிப்பு நிலையிலிருந்து எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். பிற மதங்கள் தொடர்பான கருத்துகளை எளிதாக, கேலியாக சொல்லிவிடுகிறோம். அது மிகவும் அநாகரிகம்.
தண்டிக்கப்படாத எந்த மாணவனும், முன்னேறியதாக சரித்திரம் இல்லை. இன்று ஆசிரியர்கள் மாணவர்களை பார்க்கிறார்களே தவிர, கவனிப்பதில்லை. சட்டமும், விதிகளும் ஆசிரியர்-மாணவர்களிடம் பிரிவை உருவாக்கியுள்ளது” என்றார் சுகி சிவம்.
விழாவில், கவிஞர் மகுடேஸ்வரன் எழுதிய `நிகழ் பாடு’, எழுத்தாளர் சு.வேணுகோபாலின் ‘கவிதை திறனாய்வு வரலாறு’, எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனின் `ஒரு கூடை தாழம்பூ’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற எழுத்தாளர் புவியரசு, “கதை, கவிதை, நாவல்களுக்கு மட்டும் வரவேற்பு இருக்கும் சூழலில், கட்டுரைத் தொகுப்புகளை தைரியமாக வெளியிடுவது வரவேற்கத்தக்கது. நடிகர் கமல்ஹாசன் கவிதையாகவே ஒரு சினிமாவை எடுக்க விரும்பினார். ஆனால், பல்வேறு சூழ்நிலைகளால் அது நடைபெறாமலேயே போய்விட்டது” என்றார். இந்த நிகழ்ச்சியில், எழுத்தாளர்கள், இலக்கிய வாசகர்கள், மாணவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.