

சென்னை
அரசு கேபிள் நிறுவனம் நடத்தும் ஆதார் நிரந்தர மையங்களில் ஆபரேட்டர்களின் அங்கீகாரத்தை யுஐடிஏஐ நிறுவனம் முடக்கியுள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆதார் பதிவு மற்றும் திருத்தப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் எல்காட் நிறுவனம் மற்றும் அரசு கேபிள் நிறுவனம் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் ஆதார் பதிவை மேற்கொள்கின்றன. இவற்றில் எல்காட் நிறுவனம் 214 ஆதார் நிரந்தர மையங்களையும், அரசு கேபிள் நிறுவனம் 311 மையங்
களையும் இயக்கி வருகின்றன.
அரசு கேபிள் நிறுவனத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஆதார் பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் 311 மையங்களில் 483 கவுன்ட்டர்கள் செயல்பட்டு வருகின்றது. அவற்றில் இதுவரை 27 லட்சத்து 37 ஆயிரம் ஆதார் விவரங்கள் பதிவும், 49 லட்சத்து 37 ஆயிரம் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் பணிபுரியும் ஆபரேட்டர்கள், யுஐடிஏஐ நிறுவனம் (இந்திய தனி அடையாள ஆணையம்) நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்று, அதன் அங்கீகாரம் பெற்றவர்களாக உள்ளனர்.
அண்மைக் காலமாக முறையாகஆதார் பதிவுகளை மேற்கொள்ளாத ஆபரேட்டர்களின் அங்கீகாரத்தை யுஐடிஏஐ நிறுவனம் முடக்கி வருகிறது. அவ்வாறு அரசு கேபிள்நிறுவனம் நடத்தும் ஆதார் மையங்களில் மட்டும் 229 பேரின் அங்கீகாரம் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தேர்வுகள் நடத்தவில்லை
இதனால், சென்னை ரிப்பன் மாளிகை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் ஆதார் பதிவு மையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தப் பணிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெறவில்லை. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் ஏமாற்
றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
தமிழகத்தில் ஆதார் பதிவு மேற்கொள்ளும் பதிவாளராக தமிழ்நாடு மின்னாளுமை முகமை உள்ளது. அம்முகமை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அண்மைக் காலமாக யுஐடிஏஐ நிறுவனம், ஆபரேட்டர்களை அங்கீகரிப்பதற்கான தேர்வுகளை நடத்தவில்லை. அத
னால் அந்நிறுவன அங்கீகாரம் பெற்ற ஆபரேட்டர்கள் இல்லை.
புதிய ஆபரேட்டர்களை அனுப்புமாறு யுஐடிஏஐ நிறுவனத்திடம் கேட்டிருந்தோம். அவர்களிடம் அங்கீகாரம் பெற்ற ஆபரேட்டர்கள் கைவசம் இல்லை என தெரிவித்துள்ளனர். விரைவில் ஆபரேட்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
இதுகுறித்து யுனைட் தொழிற்சங்க பொதுச்செயலர் அழகுநம்பி வெல்கின் கூறியதாவது:
இதேபோன்று எல்காட் நிறுவனம் மற்றும் இதர நிறுவன ஆதார் மைய ஆபரேட்டர்களின் அங்கீகாரமும் முடக்கப்பட்டது. உரிய அபராதத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செலுத்தி, முடக்கப்பட்ட ஆபரேட்டர்களின் அங்கீகாரம் சரி செய்யப்பட்டது. ஆனால் அதற்கான முயற்சியை அரசு கேபிள் நிறுவனம் மேற்கொள்ளவில்லை. ஆபரேட்டர்களுக்கு உரிய பயிற்சி அளிக்குமாறு யுஐடிஏஐ நிறுவனம் அறிவுறுத்தியும், கடந்த 3 ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
புதிய நபர்களை நியமிப்பது...
இந்நிலையில், ஆபரேட்டர்கள் மீது பழிபோடப்பட்டு, பணி நீக்கம் செய்ய முயற்சி நடக்கிறது. ஒரு நிறுவனத்தில் பணியாளர் தவறு செய்தால், அவர் திருந்த வாய்ப்பளிக்க வேண்டும் என்று தொழிலாளர் சட்டம் கூறுகிறது. ஆபரேட்டர்களின் அங்கீகாரம் முடக்கப்பட்டால், புதிய நபர்களை நியமிப்பது என்பது தீர்வாகாது.
இவ்வாறு அவர் கூறினார்.