

ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பாதியளவு மட்டுமே சீரமைக்கப்பட்ட சாலையின் மீதிப்பகுதியில் வெறும் ஜல்லிக் கற்கள் கொட்டி நகராட்சி நிர்வாகம் கணக்கு காட்டியுள்ளது.
ஆவடி நகராட்சிக்குட்பட்ட ஏரியில் கடந்த 1993-ம் ஆண்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டன. 115 ஏக்கர் பரப் பளவை கொண்ட இந்த ஏரியில் ஆறு பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு 3,700 மனைகள் உருவாக்கப்பட்டன. தற்போது, இந்தக் குடியிருப்பில் ஆறாயிரம் வீடுகள் உள்ளன. இதில், 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.
இக்குடியிருப்பு ஏற்படுத்தப் பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் போதிய சாலை வசதி செய்யப்படவில்லை. இதுகுறித்து, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர், நகராட்சித் தலைவர், ஆணையர் உள்ளிட்டோரிடம் பலமுறை புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள 60 அடி அகல பிரதான சாலை அண்மையில் தார் சாலையாக செப் பனிடப்பட்டது. அதுவும் பகுதி யளவு மட்டும்தான் சீரமைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், இச்சாலை செப்பனிட செய்யப்பட்ட செலவு எவ்வளவு எனக் கேட்டு ஆர்.ஞானசேகர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆவடி நகராட்சிக்கு கடிதம் அனுப்பினார்.
அதற்கு நகராட்சி பொது தகவல் அலுவலரான உதவி பொறியாளர் கே.வைத்தியலிங்கம் அளித்துள்ள பதிலில் ஆவடி என்.எம்.சாலையில் இருந்து வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் தெரு வரை உள்ள 60 அடி அகல சாலை 2014-15-ம் ஆண்டில் வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மற்றும் முத்துமாரியம்மன் கோயில் முதல் 30 அடி சாலை வரை பொது நிதியின் கீழ் ரூ.25 லட்சம் செலவில் தார் சாலையாக சீரமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
உண்மையில், இச்சாலையின் முழு நீளமும் சீரமைக்கப்பட வில்லை. பகுதி அளவு மட்டுமே சீரமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. சாலை யின் முழு அளவுக்கும் சீரமைப் பதற்காகத்தான் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சாலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத் தின கீழ் தகவல் பெறப்பட்ட விஷ யத்தை அறிந்த நகராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்காத பாக்கி உள்ள சாலையில் வெறும் ஜல்லிக் கற்களை மட்டும் கொண்டு வந்து நிரப்பி சாலை போடப்பட்டதாக கணக்கு காட்டியுள்ளது. இது குறித்து, நகராட்சி அதிகாரி ஒரு வரிடம் கேட்டபோது, ‘வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள 60 அடி பிரதான சாலை முழுவதும் சீரமைப் பதற்காகத்தான் ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் சாலை முழுவதும் தார் சாலையாக சீரமைக்கப்படும்’என்றார்.