

ராகுலைப் பிரதமராக முன்மொழிந்ததற்காக ஸ்டாலின் தலைகுனிய வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான உறுப்பினர்களைச் சேர்த்து வருகிறோம். கடந்த தேர்தலில் தமிழகத்தில் நாங்கள் பின்னடைவைச் சந்தித்தாலும் தற்போது மக்கள் ஆர்வத்துடன் கட்சியில் இணைந்துவருகின்றனர். பாஜக ஆதரவு மனநிலையில் மக்கள் இருக்கின்றனர். உறுப்பினர் சேர்க்கைக்காக மாவட்டம்தோறும் செல்கிறேன். தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்திருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
ஸ்டாலின், மோடியை வெளிநாட்டுப் பிரதமர் என்று சொன்னார். ஆனால் ஸ்டாலின் முன்னிறுத்திய எதிர்க்கட்சித் தலைவர், இந்திய அரசியலிலேயே இல்லாமல் லண்டனில் சென்று அமர்ந்திருக்கிறார். ஸ்டாலின் இதற்காகத் தலைகுனிய வேண்டும். இப்படிப்பட்டவரைப் பிரதமராக முன்னிறுத்தினோமே என்று அவர் வருத்தப்பட வேண்டும். ஸ்டாலின் போடும் கணக்கெல்லாம் தப்புக்கணக்காக இருக்கிறது. தேர்தலுக்கு முன்பே இதை நான் குறிப்பிட்டுச் சொன்னேன்.
மத்திய அரசு எந்த விதத்திலும் இந்தியைத் திணிக்கவில்லை. அதிகாரிகள் சிலரின் தவறால் ரயில்வே, அஞ்சல் துறை தேர்வில் பிரச்சினை ஏற்பட்டது. கல்விக் கொள்கைகளை கல்வியாளர்களிடமும் குழந்தைகளிடமும் விடவேண்டும். இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கருத்துகளைப் பதிவு செய்யலாம்.
குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களைச் சரிசெய்யும் சூழலுக்காகவே கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தயவுசெய்து குழந்தைகளைப் படிக்கவிடுங்கள். இதை அரசியலாக்காதீர்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் 37 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஏன், கனிமொழி மட்டும் தினசரி நாடாளுமன்றத்தில் பேசுகிறார். தலைமைப் பதவிக்கு உதயநிதி வருகிறார். வாரிசு அரசியலை திமுக ஊக்குவிக்கிறது.
தூத்துக்குடியில் தோற்றுப் போனதால், நான் அம்மாவட்டத்துக்கு எதுவும் செய்யமாட்டேன் என்றில்லை. அவர்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்வேன்'' என்றார் தமிழிசை.