Published : 24 Jul 2019 05:15 PM
Last Updated : 24 Jul 2019 05:15 PM

மதுரை அரசு மருத்துவமனையில் பகிரங்கமாக 'மீன்' விற்பனை: ரோட்டில் செல்வதுபோல் வார்டுகளுக்கு பைக்கில் சென்று இடையூறு ஏற்படுத்தும் வியாபாரி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு அவர்கள் பணிபுரியும் வார்டுகளுக்கு மீன் வியாபாரி ஒருவர் தினமும் இரு சக்கர வாகனத்தில் சென்று மீன்களை விற்பனை செய்து வருகிறார்.

நோயாளிகளை ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லும் சாய்வு தளத்திலும், நடைபாதையிலும் அவர் லாவகமாக ரோட்டில் செல்வதுபோல் பைக்கில் சென்று மீன் வியாபாரம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னைக்கு அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைதான் தமிழகத்தில் முக்கிய மருத்துவமனையாக செயல்படுகிறது. மதுரை அரசு மருத்துவமனைக்கு தென் மாவட்டங்களில் இருந்து ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வெளி நோயாளிகள், 3 ஆயிரம் உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களைப் பார்க்க வரும் பார்வையாளர்களையும் சேர்த்தால் தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்திற்குள் வந்து செல்கின்றனர். 

அதனால் நோயாளிகள், அவர்களைப் பார்க்க வரும் பார்வையாளர்களைக் குறி வைத்து மருத்துவமனை வளாகத்தில் 6 ஹோட்டல்கள் செயல்படுகின்றன. இந்த ஹோட்டல்களில் பாதுகாப்பில்லாமல் எரிவாயு சிலிண்டர்களைக் கொண்டு முழுநேரமும் உணவுகள் சமைப்பதும், விற்பனை செய்வதும் அமோகமாக நடக்கிறது. 

மருத்துவர்களுக்கு தனி கேன்டீன், அவர்களுக்கு கீழ் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்கள், மருத்துவ மாணவர்களுக்குத் தனி கேன்டீன் மற்றும் பார்வையாளர்களுக்கு கேன்டீன் என்று மருத்துவமனை வளாகம் வணிக வளாகமாகவே மாறிவிட்டது. 

இதுதவிர வார்டுகளில் சிகிச்சை பெறும் உள் நோயாளிகளுக்கு, அவர்களுடன் தங்குவோரைக் குறிவைத்து சிறு வியாபாரிகள் கைகளில் ‘டீ’ கேன் மற்றும் உணவுப் பொட்டலங்கள், தின்பண்டங்களை எடுத்துச் சென்று கூவிக்கூவி விற்பனை செய்கின்றனர். 

வார்டுகளில் தங்கி சிகிச்சை பெறுவோர் உடலுக்கு ஆரோக்கியமில்லாத, பாதுகாப்பில்லாத இந்த உணவுகளை வாங்கிச் சாப்பிட்டு அவர்களுக்கு மேலும் உடல்நலன் பாதிக்கப்படுகிறது. 

இதுகுறித்து ஏற்கெனவே பலமுறை சமூக ஆர்வலர்கள் அதற்கான ஆதாரத்துடன் டீனிடம் புகார் செய்தும், தற்போது வியாபாரிகளைக் கட்டுப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது ‘மீன்’ வியாபாரமும் களைகட்டத் தொடங்கியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக தினமும் காலை நேரத்தில் பைக்கில் வரும் மீன் வியாபாரி ஒருவர் மீன் பெட்டியுடன் வார்டுகளுக்கும் செல்கிறார். அதற்காக ஆர்டர் செய்து காத்திருக்கும் மருத்துவர்கள் அவரிடம் மீன் வாங்குகிறார்கள். 

நோயாளிகள், அவர்களைப் பார்க்க வரும் பார்வையாளர்களுடைய வாகனங்களையே ‘பார்க்கிங்’ பகுதியைத் தாண்டி மருத்துவமனை காவலாளிகள் அனுமதிப்பதில்லை. ஆனால், இவரை மட்டும் பாதுகாவலர்கள் தாராளமாக தினமும் அனுமதிக்கின்றனர். 

இவர், பைக்கிலேயே முதல் தளம், இரண்டாம் தளம் வரை ஒவ்வொரு வார்டுக்கும் சென்று மருத்துவர்களுக்குப் பெட்டியில் எடுத்து வந்த வகை வகையான மீன்களை விற்பனை செய்துவிட்டுத் திரும்புகிறார். மருத்துவர்கள் பணி முடிந்து வீட்டிற்குச் செல்லும் போது இந்த மீன்களை எடுத்துச் செல்வதாக புகார் எழுந்துள்ளது.

நோயாளிகளை ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்ல தரைத்தளத்தில் இருந்து முதல் தளத்திற்கு சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாய்வு தளம் வழியாக இந்த மீன் வியாபாரி, ஏதோ ரோட்டில் செல்வதுபோல் பைக்கில் செல்கிறார். வார்டுகளுக்கு செல்லும் நடைபாதைகளில் நோயாளிகளின் ஸ்ட்ரெச்சர்களை கொண்டு செல்வதற்கே விசாலமான இடவசதியில்லாமல்  இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  இந்த நடைபாதையில் செல்வதுபோல் இந்த மீன் வியாபாரி லாவகமாக பைக்கை ஹார்ன் அடித்தப்படி ஓட்டிச் செல்வது பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் பெற மருத்துவமனை ‘டீன்’ வனிதாவிடம் தொடர்பு கொண்டோம். அவர் கூறுகையில், ''மீன் வியாபாரி மருத்துவர்களுக்கு மீன்களை விற்பதற்காக வருவதில்லை. கேன்டீனில் மீன் கொடுப்பதற்காக வருகிறார். ஆனால், மக்கள் நடமாடும் சாய்வு தளத்தில் மீன் வியாபாரி பைக்கில் சென்றது தவறுதான். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x