Published : 24 Jul 2019 03:59 PM
Last Updated : 24 Jul 2019 03:59 PM

பாலாற்றில் அணைகள்: ஆந்திர அரசின் அத்துமீறலை தமிழக அரசு ஆதரிக்கிறதா?- முத்தரசன் கேள்வி

சென்னை

பாலாற்றில் அணைகள் கட்டப்படுவதை தடுத்து நிறுத்திட போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முத்தரசன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கை:

 "தமிழகத்தின் முக்கிய நதிகளில் ஒன்றான பாலாற்றில் 22 இடங்களில் தடுப்பணைகளைக் கட்டியுள்ள ஆந்திர அரசு, தற்போது 40 அடி வரை உயர்த்தி கட்டி வருவது மிகக் கடுமையான கண்டனத்திற்குரியது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடக மாநிலத்தில் 93 கி.மீ. தூரம் பயணிக்கின்றது. ஆந்திர மாநிலத்தில் 33 கி.மீ. தூரம் மட்டுமே பயணித்து, தமிழ்நாட்டில் 222 கி.மீ. தூரம் பயணித்து வங்கக் கடலில் சங்கமமாகிறது.

தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 4 1/2 லட்சம் ஏக்கர் வேளாண்மை மற்றும் குடிநீருக்கும், சென்னை பெருநகர் குடிநீருக்கும் பயன்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஆந்திர மாநில எல்லைக்குட்பட்ட 33 கி.மீ. தூரத்தில் 22 அணைகளை 5 அடி உயரத்தில் கட்டி பின்னர் 12 அடியாக உயர்த்தப்பட்டு தற்போது 40 அடி உயரத்திற்கு 22 இடங்களிலும் கட்டி வருவது மிகுந்த அதிர்ச்சிக்குரியதாகும்.

ஆந்திர அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை மூலம், பாலாற்றில் நாம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பெற முடியாத மிக மோசமான நிலை உருவாகும். வேலூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள விவசாய விளைநிலங்கள் முற்றிலும் பாலைவனமாகும். நிலத்தடி நீர் என்பது கிடைக்காமல் போவதுடன் மிகக் கடுமையான குடிதண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படும்.

பாலாற்றைப் பாதுகாக்க வேண்டிய மிகப் பெரும் பொறுப்பும், கடமையும் அனைவருக்கும் உள்ளது. பாலாற்றை முற்றிலுமாக ஆந்திர அரசு ஆக்கிரமித்து விட்டது என்ற நிலையில், தமிழக அரசு மவுனம் காப்பது வியப்பாக உள்ளது. தமிழக அரசு மவுனம் காப்பதன் மூலம் ஆந்திர அரசின் அத்துமீறலை ஏற்று ஆதரிக்கின்றதா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.

தமிழக அரசின் மவுனத்தைக் கண்டிப்பதுடன், பாலாற்றில் அணைகள் கட்டப்படுவதை தடுத்து நிறுத்திட போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்"  என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x