

பட்டாக்கத்தியுடன் தாக்குதலில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அக்கல்லூரியின் முதல்வர் அருள்மொழிச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கல்லூரி முதல்வர் அருள்மொழிச்செல்வன் அளித்த பேட்டி:
''தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு மாணவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி ஆட்சிக் குழு விசாரணைக் கமிட்டியை அமைத்துள்ளது. அவர்களின் செயல்பாட்டுக்கு அவர்களின் குடும்பச் சூழலும் முக்கியக் காரணம். எந்த மாணவரும் கத்தியுடன் கல்லூரிக்கு வருவதில்லை.
மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும். சம்பந்தப்பட்ட மாணவர்கள் திருந்துவதற்கு மனநல ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. ஒழுக்கத்துடன் அளிக்கப்படும் கல்வியே சிறந்த கல்வியாக இருக்கும். அதைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
மோதலில் ஈடுபடும் மாணவர்களைக் கண்காணிக்க ஆசிரியர்களைக் கொண்ட படை அமைக்கப்பட்டுள்ளது. பச்சையப்பன் கல்லூரியில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாலும் கல்லூரிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாலும் இரண்டு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையுடன் ஒருங்கிணைந்து கல்லூரி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது''
இவ்வாறு கல்லூரி முதல்வர் அருள்மொழிச்செல்வன் தெரிவித்தார்.
பின்னணி:
சென்னை பெரம்பூரில் இருந்து திருவேற்காட்டுக்குச் செல்லும் 29 E பேருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1.30 மணியளவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரும்பாக்கம் சிக்னல் அருகே வந்தது. அப்போது பேருந்துக்குள் இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள் பயங்கரமாக மோதிக் கொண்ட னர்.
சண்டைபோடும் நோக்கத்தோடு தயாராக வந்திருந்ததால் பட்டாக் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை எடுத்துவந்து சக மாணவர்களைச் சுற்றி வளைத்து வெட்டினர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறினர். இதனால் ஓட்டுநர் உடனடியாக வண்டியை நிறுத்தினார்.
இதையடுத்து தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு தரப்பு மாணவர்கள் பேருந்தில் இருந்து குதித்து வெளியே ஓடினர். அவர்களை பட்டாக்கத்தியுடன் துரத்திச் சென்று மற்றொரு தரப்பினர் தாக்கினர். சாலையில் சென்றவர்கள் இந்தக் காட்சிகளைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போக்கு குறித்து கடுமையான கண்டனங்கள் எழுந்தன. தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.