

திண்டுக்கல்லில் இன்று (ஜூலை 24) காலை பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் வேன் ஒன்று பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பள்ளிக் குழந்தைகள் 20 பேர் லேசான அளவில் காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடியில் உள்ளது புனித சூசையப்பர் நடுநிலைப்பள்ளி. இதில் படிக்கும் சுற்றுவட்டார கிராமப் பிள்ளைகளை பெற்றோர்கள் தனியார் வேன் ஒன்றை ஒப்பந்தம் செய்து அதில் அனுப்பி வைக்கின்றனர்.
வழக்கம்போல் இன்று காலை பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட வேன் முள்ளிப்பாடி - மோளப்பாடிக்கு இடையே சென்றபோது விபத்து நேர்ந்தது. வேனை ஓட்டுநர் பாண்டி இயக்கியுள்ளார்.
விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "வேன் முள்ளிப்பாடிக்கும் - மோளப்பாடிக்கும் இடையே சென்றபோது விபத்து நேர்ந்தது. குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக வேன் ஓட்டுநர் சற்று பக்கவாட்டில் வேனைத் திருப்பினார்.
இதில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்து வாய்க்கால் பள்ளத்தில் கவிழ்ந்தது. சிறிய பள்ளம் என்பதால் பெரும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. மாணவர்களுக்கு லேசான காயமே ஏற்பட்டுள்ளது. காயமடைந்த காவ்யா, பிரியதர்ஷினி, கவுசல்யா உட்பட 20 குழந்தைகளும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று சிலர் வீடு திரும்பிவிட்டனர். ஒருசிலரை மட்டும் மருத்துவர்கள் மாலையில் வீடு செல்லலாம் எனக் கூறியுள்ளனர்" என்றனர்.