

சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், மீண்டும் மீண்டும் துவைத்துப் பயன்படுத்தும் துணி டயப்பர்கள் இன்றைய சந்தையில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகின்றன. நீண்ட காலப் பயன்பாட்டுக்கு உகந்தது என்ற வகையில் துணியாலான டயப்பர்களை நோக்கி மக்களின் கவனம் குவிந்து வருகிறது.
குழந்தைக்கும் சவுகரியம், பெற்றோருக்கும் எளிது என்பதால் டயப்பர்களை பயன்படுத்தத் தொடங்கிய பெற்றோருக்கு, டயப்பரில் உள்ள நச்சுகள் குறித்துத் தெரிவதில்லை. சிறுநீர் நாற்றத்தைத் தவிர்க்கவும் உறிஞ்சும் தன்மையை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படும் நச்சுகள், குழந்தைகளில் தோலுக்குக் கேடு விளைவிப்பவை என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில் துணி டயப்பர்கள் குறித்து கிட்டிஹக் (KiddieHug) என்னும் துணி டயப்பர் நிறுவனத்தை பொள்ளாச்சியில் நடத்தி வரும் திவ்யா, பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
''என் மகனுக்கு டயப்பர்கள் பயன்படுத்தும்போது அமெரிக்காவில் இருக்கும் தோழி, துணி டயப்பர்களைப் பரிசாக அளித்தார். அதைப் பயன்படுத்தியபோது கிடைத்த சவுகரியத்தால் துணியாலான டயப்பர்களையே பயன்படுத்தத் தொடங்கினேன். அதுதவிர வழக்கமான டயப்பர்களில் அதிக விலை, இடத்தை அடைப்பது, ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடிவது ஆகிய பிரச்சினைகள் இருந்தன.
ஆரம்பத்தில் பொறியியல் கல்லூரியில் வேலை பார்த்த எனக்கு, மகன் பிறந்த பிறகு வீட்டில் இருந்தது போரடித்தது. சிறிய அளவில் துணி டயப்பர்களை வாங்கி, தெரிந்த நண்பர்களுக்கு விற்க ஆரம்பித்தேன். வேலை பிடித்துப் போனது. ஏன் நாமே ஒரு நிறுவனத்தைத் தொடங்கினால் என்ன என்று தோன்றியது.
முதலில் இன்றைய இளம் அம்மாக்களின் தேவைகளையும் ஆலோசனைகளையும் தெரிந்துகொண்டேன். அதற்கேற்ற வகையில், கிட்டிஹக் (KiddieHug) என்ற நிறுவனத்தை 2018 ஜூன் மாதம் தொடங்கினேன்.
குழந்தை ஆதிர்க் உடன் திவ்யா
1 துணி டயப்பருக்கான விலை ரூ.800. கேட்ட எல்லோருமே விலையைப் பார்த்து மலைத்தனர். ஆனால், இதன் சிறப்பம்சம் 250- 300 முறை துணி டயப்பரைத் துவைத்துப் பயன்படுத்த முடியும். சுமார் 2 முதல் 2.5 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். இந்தக் காலகட்டத்தில் மற்றவகை டயப்பர்களுக்கு ஆகும் செலவை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த டயப்பரின் செலவும் மிகக் குறைவு. சூழலுக்கும் நாம் பாதிப்பை ஏற்படுத்தாத மனநிறைவு.
இதில் லீக் ஆகாது. ஈரப்பதம் குழந்தைக்குத் தெரியாது'' என்கிறார் திவ்யா.
துணி டயப்பர்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன? என்று கேட்டபோது,
''இதில் குழந்தைகளின் தேவை, உடல் எடைக்கு ஏற்றவாறு டயப்பர்கள் தயாரிக்கப்படுகின்றன. மூங்கில், சணல் ஆகிய இயற்கைப் பொருட்களைக் கொண்டு இவை உருவாகின்றன. இதில் நான்கு அடுக்குகள் இருக்கும். முதல் அடுக்கு, குழந்தை ஈரத்தை உணராத வகையில் அமைக்கப்பட்டிருக்கும். 4-வது வெளி அடுக்கு தண்ணீர் (சிறுநீர்) வெளியே வராமல் தடுக்கும்.
இடையில் இருக்கும் இரண்டு அடுக்குகளில் நீரை உறிஞ்சும் தன்மை கொண்ட பேட் (Pad) அமைக்கப்படும். இந்த அடுக்கின் தடிமன், குழந்தைகளின் எடைக்கு ஏற்றவாறு தயாராகும். உதாரணத்துக்கு 5 கிலோ எடை கொண்ட குழந்தைக்கு 4 அடுக்குகள் போதும். 17 கிலோ எடை கொண்ட சிறுவர்களுக்கு 8 அடுக்குகள் தேவைப்படும். இதை சுமார் 8 மணிநேரம் முதல் 10 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.
புதிதாகப் பிறந்த குழந்தைகளைக்கு மஸ்லின் துணியைக் கொண்ட டயப்பர்களைத் தயாரித்து விற்பனை செய்கிறோம். ஏனெனில் குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கும். கருப்பு நிறத்தில் மலம் வெளியாகும். அதற்கேற்ற வகையில் கவர் டயப்பர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
துணி டயப்பர்களைப் பயன்படுத்துவது எப்படி?
மற்றவகை டயப்பர்களைப் போலவே, இதையும் எளிதாகப் பயன்படுத்தலாம். குழந்தையின் எடை மற்றும் தேவைக்கு ஏற்றவகையில் டயப்பரின் அளவை மாற்றம் செய்ய பட்டன் வசதியும் இதில் உள்ளது. அதேபோல உள்ளே உள்ள இரண்டு அடுக்குகளை வெளியில் எடுத்துப் பயன்படுத்தும் விதமாகவும் உள்ளேயே தைக்கப்பட்டும் இரண்டு விதமான டயப்பர்கள் உள்ளன.
இதுதொடர்பான விரிவான தகவலுக்கு: வீடியோ
துவைக்கும்போது மட்டும் அதை முறையாக அலச வேண்டும். நறுமணமூட்டிகளைக் கொண்டு அலசக் கூடாது. நறுமணத்தை அளிக்கும் வேதிப்பொருட்களைப் பயன்படுத்தினால் சிறுநீர் லீக் ஆக வாய்ப்புண்டு. சாதாரண டிடர்ஜெண்டுகளைப் பயன்படுத்தலாம். 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் வெந்நீரில் அலசினால் போதும்'' என்கிறார் திவ்யா.
மகனும் முக்கியம், தொழிலும் முக்கியம்
இரண்டரை வயதுக் குழந்தைக்குத் தாயாக இந்தத் தொழிலில் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ''குழந்தைக்கான நேரம் அவனுக்கு மட்டுமே என்பதில் உறுதியாக இருக்கிறேன். அவன் தூங்கும் நேரம், விளையாடும் நேரம், அதிகாலை 4 - 6 என தொழிலுக்கு ஒதுக்கிக் கொள்வேன். பிடித்து ஆரம்பித்த பணி என்பதால் மகிழ்ச்சியுடனே இதைச் செய்கிறேன். மகனும் முக்கியம், தொழிலும் முக்கியம்.
குறைவான விழிப்புணர்வு
துணி டயப்பர்கள் குறித்த விழிப்புணர்வு மக்களுக்குக் குறைவாகவே உள்ளது. அதனால் சந்தைப்படுத்துவது முக்கியத் தேவையாக உள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய இணையதளங்களில் விற்க ஆரம்பித்திருக்கிறோம். ஃபேஸ்புக்கில் https://www.facebook.com/KiddieHug என்ற பெயரில் குழு உள்ளது. இதில் இளம் அம்மாக்களுக்கு துணி டயப்பர்கள் குறித்த ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். தனியாக https://www.kiddiehug.in/ என்ற இணையதளமும் உள்ளது'' என்கிறார் திவ்யா சித்தார்த்.
அன்றாடப் பொருட்கள் அனைத்திலும் நச்சு விடுத்து, ஆரோக்கியமான பொருட்களைத் தேட ஆரம்பித்திருக்கும் நாம், குழந்தைகளின் டயப்பரிலும் இதைப் பின்பற்ற முயல்வோம்.
க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in