Published : 24 Jul 2019 11:30 AM
Last Updated : 24 Jul 2019 11:30 AM

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை; குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை: வைகோ வலியுறுத்தல்

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் திமுக மேயர், உமா மகேஸ்வரியை கொலை செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று (புதன்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், "திருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் மேயர்  உமா மகேஸ்வரி (1996-2001), அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோர் நேற்று திருநெல்வேலியில் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

பட்டப்பகலில் நடைபெற்றுள்ள இந்தக் கொலைகள், திருநெல்வேலி மாவட்டத்தை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது

திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் பெண் மேயராகப் பொறுப்பு வகித்த காலத்தில், நற்பெயர் ஈட்டியவர் உமாமகேஸ்வரி. எளிமையான அணுகுமுறை. எந்த நேரமும் மக்கள் அவரைச் சந்திக்க முடியும் என்கிற அளவுக்கு எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். அவரும் அவரது கணவரும் என் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள்.

அண்மைக்காலத்தில் தமிழகம் முழுமையும் படுகொலைகளின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்து இருப்பது பெரும் கவலை அளிக்கின்றது. உமா மகேஸ்வரியைக் கொலை செய்தவர்களை உடனடியாகப் பிடித்து, தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

இப்படுகொலைகளால் துயருறும் உற்றார் உறவினர்களுக்கு, மதிமுகவின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கல்கள்" என வைகோ தெரிவித்துள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x