காந்தியம்... ஓர் அற்புதமான வாழ்வியல் முறை!

காந்தியம்... ஓர் அற்புதமான வாழ்வியல் முறை!
Updated on
2 min read

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் சார்பில் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற்று வரும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில், ‘காந்தியம் ஓர் அற்புதமான வாழ்வியல் முறை’ என்ற  தலைப்பில் பேசினார் தமிழருவி மணியன்.

“காந்திய வாழ்வியல் முறையைப் பற்றித்  தெரிந்துகொள்வதற்கு முன், காந்தியம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப்போல, அன்பையும்,  உண்மையையும் கைக்கொள்வதே காந்தியம்.

இந்தியா தந்த மாபெரும் ஞானியான விவேகானந்தர், `இந்தியனாகப் பிறந்த  ஒவ்வொருவரும் மூன்று விரதங்களையும் இரண்டு கடமைகளையும் கைக்கொள்ள வேண்டும்’ என்றார். பசித்தவனுக்கு சோறு, நோயுற்றவனுக்கு மருந்து, அறிவற்றவனுக்கு கல்வி வழங்குவதே அந்த மூன்று விரதங்கள். தொண்டும், துறவும் இரண்டு கடமைகள்.  துறவு என்றால் காவிஉடுத்தி திரிவதல்ல; சுயநலத்தை துறப்பது.

ஆனால், காந்தியமோ 11 மகா விரதங்களை வாழ்வியல் நெறியாக முன்வைக்கிறது.  தன்னை அறிவதும் அதன் மூலம் ஆண்டவனை அறிவதும், அறிந்ததனால் ஆண்டவனை நெருங்குவதுமான சத்தியத்தைக்  கடைப்பிடிப்பது. ஒவ்வொரு வரும் முடிந்தவரை உண்மை பேச வேண்டும். தேவையற்ற பொய்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். கடவுளே உண்மையென அனைவரும் சொல்லிவந்தபோது, உண்மையே கடவுள் என்று உறுதியாய் உரைத்தவர் காந்தியடிகள்.எந்த உயிருக்கும் துன்பம் தராமல் வாழ்வதே அகிம்சை. காந்தி சொன்ன பிரம்மச்சரியம் என்பது புலன் ஒடுக்கம் அல்ல. புலனடக்கம். அவர் காமத்தை துறக்கச் சொல்லவில்லை,  நெறிப்படுத்துமாறு கூறினார். இரு கரைகளுக்கு உட்பட்டு ஓடும் நதியால்தான் ஊர் செழிக்கும். கரை கடந்த காமத்தால் அழிவே எஞ்சும். ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வதற்கான கருவியே குடும்ப அமைப்பு. தன் மனைவியிடம் திருப்தியடையாத ஒருவன், வேறு எந்தப் பெண்ணிடமும் திருப்தி கொள்ளவே மாட்டான். பொருட்களை, வசதி வாய்ப்புகளை, தேவைகளைப் பெருக்கிக் கொண்டே செல்வதல்ல நாகரிகம். கூடுமானவரை தேவைகளை சுருக்கிக் கொள்ள வேண்டும்.

உன் வீட்டில் ஓர் அறை இருந்தால் அதுஉனக்கு. இரண்டு அறை இருந்தால், இன்னொன்று மனைவிக்கு. மூன்றாவது அறை இருந்தால், அது விருந்தினருக்கு. அதற்கு மேல் அறைகள் இருந்தால் அத்தனையும் சாத்தானுக்கு என்பார் நபிகள் நாயகம். தேவைகளைச் சுருக்கிக்கொள்வதே உண்மையான வாழ்க்கை முறை.

ஆதியிலே வார்த்தைஇருந்தது. அந்த வார்த்தை இறைவனோடு இருந்தது. 

அந்த வார்த்தையே இறைவன் ஆனது’ என்கிறது பைபிள். ஒவ்வொரு வார்த்தை யையும் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும்.தீதும், நன்றும் நம் நாவிலிருந்து வரும் சொற்களில்தான் இருக்கிறது. 

வாயைத் திறந்தால் உண்மை பேசு. வாழ்வதானால் தர்மத்தின் படி வாழ் என்கிறது நமது வேதங்கள். நாவடக்கம் என்பது வார்த்தைகளை அடக்குவது மட்டுமல்ல,  சுவைகளை அடக்குவதும் கூடத்தான். வாழ்வதற்காகத்தான் உண்ண வேண்டுமே தவிர, உண்பதற்காக வாழக்கூடாது. அஞ்சாமை மனிதனுக்கு இருக்கவேண்டிய குணங்களுள் ஒன்று. அறிவற்றவனைக்கூட சகித்துக் கொள்ளலாம். கோழையை சகித்துக்கொள்ளவே முடியாது”  என்றார் தமிழருவி மணியன்.

இந்த நிகழ்வில்,  புத்தகத் திருவிழா தலைவர் பி.விஜய் ஆனந்த், துணைத் தலைவர் கே.ரமேஷ், ஒருங்கிணைப்பாளர்  நடராஜன் உள்ளிட்டோர் 
பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in