

இ.மணிகண்டன்
விருதுநகர்
கோடை முடிந்தும் தொடரும் கடும் வெயில், மேற்குத் தொடர்ச்சி மலையில் போதிய மழையின்மை போன்ற காரணங்களால் சதுரகிரி மலையில் கடும் தண்ணீர் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அன்னதானக் கூடங்களும் மூடப் பட்டுள்ளன.
திருவில்லிபுத்தூர் சாம்பல் நிற சரணாலயம் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் விருது நகர் - மதுரை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு சித்தர்கள் வழிபட்ட சுயம்பு லிங்கமாகத் தோன்றிய சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன.
சதுரகிரி மலையின் அடிவாரப் பகுதி மற்றும் நுழைவு வாயில் பகுதியான தாணிப்பாறை விருது நகர் மாவட்ட நிர்வாகத்தின் கீழும், மலைமேல் உள்ள கோயில்கள் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் கீழும் உள்ளன. எனினும், ஒட்டுமொத்த பகுதியும் வனத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ளது.
சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ஆடி அமாவாசை. இத்திருவிழா வரும் 31-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக சதுரகிரி மலைக்குச் செல்ல வரும் 27-ம் தேதி முதல் ஆகஸ்ட் 1 வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கோடை முடிந்தும் தொடர்ந்து கொளுத்தும் வெயில் காரணமாகவும், மேற்குத் தொடர்ச்சி மலையில் குறிப்பாக சதுரகிரி மலைப் பகுதியில் மழை பெய்யாததாலும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஓடை கள், காட்டாறுகள் வறண்டுள்ளன.
வனப் பகுதியில் கிடைக்கும் குறைந்த தண்ணீரை அன்னதானக் கூடங்கள் பயன்படுத்துவதால் சதுரகிரி மலையில் இயங்கி வந்த 7 அன்னதானக் கூடங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு அவை மூடப் பட்டுள்ளன. அடிவாரப் பகுதியில் இருந்து மலைப் பாதைக்குச் செல்லும் குடிநீர் குழாய்களும் இதுவரை சரிசெய்யப்படாமல் உடைந்து கிடக்கின்றன.
இந்நிலையில், பக்தர்களுக்கான வசதிகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் ராஜசேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: சதுரகிரி மலைப் பாதையில் 5 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். அடிவாரப் பகுதியில் உள்ள 4 ஆழ்குழாய் கிணறுகள் மூலமும், லாரிகள் மூலமும் தண்ணீர் பெற்று மலைப் பாதையில் அமைக்கப்படும் குடிநீர் தொட்டிகளில் நிரப்பப்படும்.
கோயிலில் அன்னதானம் கொடுக்க விரும்புவோர் அறநிலை யத் துறை அலுவலர்களிடம் அனு மதி பெற்று கோயில் நிர்வாகத்துடன் இணைந்து அன்னதானம் வழங்க லாம். மேலும், அம்மா குடிநீர் பாட்டில்கள் கொண்டு சென்று பக்தர்களுக்கு விநியோகிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.