Published : 24 Jul 2019 07:12 AM
Last Updated : 24 Jul 2019 07:12 AM

நம்பிக்கை வாக்கெடுப்பில் மஜத - காங்கிரஸ் கூட்டணி தோல்வி; கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது: ராஜினாமாவை ஏற்றார் ஆளுநர்; மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு; பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவு அமல்

இரா.வினோத்

பெங்களூரு

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி தலைமை யிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வி அடைந்தது.

ஆட்சி கவிழ்ந்ததால் பெங்களூருவில் 2 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கட‌ந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக் கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத தால் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், மஜத, பகுஜன் சமாஜ், சுயேச்சைகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. கடந்த ஓராண்டாக நடந்த இந்த ஆட்சியில் அமைச்சர் பதவி கிடைக்காததால் 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அதி ருப்தி அடைந்தனர்.

கடந்த 20 நாட்களில் 12 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். குமாரசாமியை ஆதரித்த 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதரவை திரும்ப பெற்றனர். இதனால் பெரும்பான்மையை இழந்த குமாரசாமி, பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக போர்க்கொடி தூக்கியது.

இதையடுத்து குமாரசாமி கடந்த 18-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிப்ப‌தாக அறி வித்தார். எனவே காங்கிரஸ், மஜத மூத்த தலைவர்கள் மும்பையில் பாஜகவினரின் பாதுகாப்பில் இருக்கும் அதிருப்தி எம்எல்ஏக்களிடம் ச‌மாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதனை ஏற்காத அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரும் தங்களது ராஜினாமாவை ஏற்கும்படி பேரவைத் தலைவருக்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

அதற்கு நீதிமன்றம், ''எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கும்படி பேரவைத் தலைவருக்கு உத்தரவிட முடியாது. காங் கிரஸ், மஜத கொறடா மூலம் ந‌ம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு எம்எல்ஏக் களை கட்டாயப்படுத்தக்கூடாது'' என உத்தரவிட்டது. இதில் விளக்கம் கோரி குமாரசாமியும், காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவும் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அதிருப்தி எம்எல்ஏக்கள் நம் பிக்கை வாக்கெடுப்புக்கு வராமல் மும்பையிலேயே தங்கியிருந்தனர்.

குமாரசாமி அரசுக்கு போதிய பெரும் பான்மை இல்லாததால், சட்டப்பேரவை யில் நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்தி வைக்கும் முயற்சியில் காங்கிரஸாரும், மஜதவினரும் ஈடுபட்டனர். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவையில் இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநர் 2 முறை விதித்த கெடுவையும் ஏற்காமல் காங்கிரஸாரும், மஜதவினரும் பாஜகவின் குதிரை பேரம் உள்ளிட்டவை குறித்து விவா தம் நடத்தியதால் கடும் அமளி ஏற்பட்டது.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி வரை அவை நடந்த போதும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதில் இழுபறி நீடித்தது. கடந்த 4 நாட்களாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில் உடனடியாக நம்பிக்கை வாக் கெடுப்பு நடத்தக்கோரி சுயேச்சை எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், “பேரவைத் தலைவருக்கு உரிய கால அவகாசம் கொடுத்துவிட்டோம். செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவார் என நம்புகிறோம். இல்லையென்றால் இவ்வழக்கை புதன்கிழமை விசாரித்து தீர்ப்பளிக்கிறோம்'' என்றார். இதையடுத்து உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

ஆப்ரேஷன் தாமரை சக்ஸஸ்

அவையில் சித்தராமையா பேசும் போது, “அதிருப்தி காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை பாஜக ஆப்ரேஷன் தாமரை மூலம் ரூ.30 கோடி வரை கொடுத்து இழுத்துள்ளது. பணத்துக்காக வும், பதவிக்காகவும் துரோகம் செய்த எம்எல்ஏக்களை மக்கள் மன்னிக்க மாட் டார்கள். தமிழகத்தில் முதல்வர் பழனி சாமிக்கு எதிராக செயல்பட்ட எம்எல்ஏக் களை தகுதி நீக்கம் செய்ததுபோல, மும்பை யில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்'' என்றார்.

அமைச்சர் டி.கே.சிவகுமார் பேசும் போது, “எடியூரப்பா மீண்டும் முதல் வராக பொறுப்பேற்றாலும் நீண்ட காலம் பதவியில் இருக்க முடியாது. நான் நினைத் திருந்தால் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வந்தபோதே, ஒரு அறையில் போட்டு அடைத்து வைத்திருக்க முடியும். ஆனால் ஜனநாயகத்தின் மாண்பை மதித்து அவ்வாறு செய்யவில்லை. ஆனால் பாஜக எதையும் பொருட் படுத்தாமல் அவர்களை மும்பையில் அடைத்து வைத்திருக்கிறது'' என்றார்.

பேரவைத் தலைவர் எச்சரிக்கை

இதற்கு எடியூரப்பா உள்ளிட்ட பாஜக வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர். ஒரு கட்டத்தில் காங்கிரஸா ருக்கும், பாஜகவினருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டபோது, எடியூரப்பா பாஜக வினரை அமைதிப்படுத்தி இருக்கையில் அமரச் சொன்னார். இன்றைக்கும் தேவையில்லாத பிரச்சினையை கிளப்பி, அவையை ஒத்திவைக்க ஆளும் தரப்பு முயற்சிக்கிறது. உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக் கோரினார்.

அதற்கு பேரவைத் தலைவர் ரமேஷ் குமார், “இன்று மாலைக்குள் நிச்சயம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். ஒருவேளை என்னால் வாக்கெடுப்பு நடத்த முடியாமல் போனால் என் பதவியை ராஜி னாமா செய்துவிடும் முடிவில் வந்திருக் கிறேன். எனது சட்டைப்பையில் ராஜி னாமா கடிதம் வைத்துள்ளேன்'' எனக்கூறி, தனது சட்டைப்பையில் இருந்து கடி தத்தை எடுத்து அவை காவலர் மூலமாக எடியூரப்பாவிடம் காண்பித்தார்.

6 கோடி மக்களிடம் மன்னிப்பு

இதையடுத்து அவைக்கு தாமதமாக வந்த முதல்வர் குமாரசாமி, “நான் எப் போதும் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டி ருக்க விரும்பியதில்லை. அரசியலே விரும் பாதபோது காங்கிரஸார் என்னை முதல் வராகும்படி கேட்டுக்கொண்டதால் இந்த பொறுப்பை ஏற்றேன். கடந்த 14 மாத காலத் தில் எனது ஆட்சியை கவிழ்க்க பாஜக 7 முறை முயற்சித்துள்ளது. தற்போது 15 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, ஆட்சி கவிழ்ப்பை வெற்றிகரமாக முடித்துள்ளது.

கடந்த சில தினங்களாக அவைக்கு வரும்போது சட்டைப்பையில் ராஜினாமா கடிதத்தையும் கொண்டு வருகிறேன். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் ராஜினாமா செய்ய விரும்பவில்லை. என் முதல்வர் பதவியை மகிழ்ச்சியோடு தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். அரசியலில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட குழப்பத்துக்காக 6 கோடி கர்நாடக மக்களிடமும், பேரவைத் தலைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' எனக்கூறி நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான பேச்சை நிறைவு செய்தார்.

பாஜகவுக்கு 105 பேர் ஆதரவு

இதையடுத்து மாலை 7 மணியளவில் அவையின் கதவுகள் அடைக்கப்பட்டு பேரவைத் தலைவர் ரமேஷ்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். அவையில் காங்கிரஸ், மஜத, பாஜக வினருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் உறுப்பினர்களை அமர வைத்து, தனித்தனியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். இதில் ஆளும் காங்கிரஸ், மஜத கூட்டணிக்கு 99 வாக்குகளும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கு 105 வாக்குகளும் கிடைத்தன. இரு கட்சி களுக்கும் இடையே 6 வாக்குகள் வித்தியாசம் இருந்ததால் பேரவைத் தலைவர் வாக்களிக்கவில்லை. இதை யடுத்து குமாரசாமி அரசு தோல்வி அடைந்ததாக அறிவித்தார்.

ராஜினாமா ஏற்பு

ஆட்சியை இழந்துள்ள குமாரசாமி நேற்றிரவு ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.

தற்போதைய நிலையில் ஆட்சி அமைக்க 105 எம்எல்ஏக்களின் ஆதரவு போதும் என்பதால் ஆளுநர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எடியூரப்பா ஒரு சில தினங்களில் முதல்வ ராக பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்துள்ளதால் மாநிலம் முழுவதும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெங் களூருவில் நேற்று மாலை 6 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்ற சுயேச்சை எம்எல்ஏக்கள் சங்கர், நாகேஷ் ஆகிய இருவரும் பெங்களூரு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப் பில் தங்கியிருப்பதாக தகவல் வெளி யானது. அங்கு சென்ற காங்கிரஸ், மஜத வினர் அடுக்குமாடி குடியிருப்பை முற் றுகையிட்டனர். அப்போது அங்கு வந்த பாஜகவினர் காங்கிரஸாருடன் மோதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இரு தரப்பினரையும் கைது செய்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பகுஜன் சமாஜ் எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம்

கர்நாடகாவின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மகேஷ், குமாரசாமி அரசுக்கு ஆதரவு அளித்து வந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, எம்எல்ஏ மகேஷுக்கு உத்தரவிட்டார். ஆனால் அவர் நேற்று சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பாஜகவுக்கு ஆதரவாக கூட்டத்தை புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து நீக்கி மாயாவதி உத்தரவிட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் அவர் நீக்கப்படுவதாக மாயாவதி அறிவித்துள்ளார். மகேஷ் மட்டுமன்றி காங்கிரஸ், மஜதவைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், 2 சுயேச்சைகள் என 20 எம்எல்ஏக்கள் நேற்று சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x