Published : 24 Jul 2019 06:59 AM
Last Updated : 24 Jul 2019 06:59 AM

உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் ஆந்திர மாநில அரசு; பாலாற்றின் குறுக்கே 40 அடியாக உயர்த்தப்படும் தடுப்பணை: சொட்டு தண்ணீர்கூட தமிழகத்துக்கு கிடைக்காத நிலை உருவாகியுள்ளது

வாணியம்பாடி

ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே 22 அடியாக உள்ள தடுப்பணைகளை 40 அடியாக உயர்த்திக் கட்டும் பணிகளில் ஆந்திர அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

தமிழகத்தின் முக்கிய நதிகளில் ஒன்றான பாலாறு மூலம் வடமாவட்டங் களில் 4.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றுவந்தன. இந்நிலையில், ஆந்திர அரசு கடந்த 2006-ம் ஆண்டு சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த கணேசபுரம் பகுதி யில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப் பணையை கட்ட முயன்றது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதையடுத்து, 2009-ம் ஆண்டு மத்திய நீர்வள குழுமத்துடன் 2 மாநில அரசு களும் கலந்து பேசி சுமுக முடிவு காணவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடி வடைந்ததால் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே பல்வேறு இடங்களில் தடுப் பணைகள் கட்ட நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2011-ம் ஆண்டு மீண்டும் மனுத் தாக்கல் செய்தது.

ஆந்திர அரசை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், பாலாறு பாதுகாப்பு சங்கங்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட் டன. இதனால், பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணியை ஆந்திர அரசு தற்காலிகமாக நிறுத்தியது.

அதன்பிறகு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கை துரிதப்படுத்தாததால், கடந்த 2016-ம் ஆண்டு ஆந்திர அரசு பெரும்பள்ளம், எஸ்.எம்.பள்ளம், சாமுண்டிபள்ளம், ஒக்கல்ரேவ் உள்ளிட்ட இடங்களில் பாலாற்றின் குறுக்கே 5 அடி உயர தடுப்பணைகளை மீண்டும் கட்டத் தொடங்கியது. தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியான வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூர் கனகநாச்சியம்மன் கோயில் அருகே 5 அடி உயரமாக இருந்த தடுப்பணையை 12 அடியாக உயர்த்திக் கட்டியது.

இதற்கு, தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில், பாலாற்றின் குறுக்கே 22 இடங்களில் கட்டப்பட்ட அனைத்து தடுப்பணைகளையும் 12 அடியாகவும், அதன் பிறகு 22 அடியாகவும் உயர்த்தி கட்டியது.

இந்நிலையில், 22 தடுப்பணைகளை யும் தற்போது 40 அடியாக உயர்த்தி கட்ட அம்மாநில அரசு ரூ.43 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இப்பணிகள் தொடங்கும்போது ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றதால் இதற்கான பணிகள் தள்ளிவைக்கப்பட்டன.

ஆந்திர மாநிலத்தில் தேர்தல் முடிந்து அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தடுப்பணைகளை உயர்த்தி கட்டும் பணிகள் தற்போது அங்கு முழுவீச்சில் நடந்து வருகின்றன.

ஆந்திர மாநிலம் குப்பம் மண்டலத் துக்கு உட்பட்ட கிடிமாணிபெண்டா செல்லும் சாலையின் அருகேயுள்ள கங்குத்தி ஊராட்சியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை 40 அடியாக உயர்த்திக் கட்டும் பணி கிட்டத்தட்ட நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இதேபோல், 22 தடுப்பணைகளையும் 40 அடியாக உயர்த்திக் கட்ட ஆந்திர அரசு முடிவெடுத்து, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து பணி ஆணைகளை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பெருமழை பெய்தாலும் இனி ஒரு சொட்டு தண்ணீர்கூட தமிழகத்துக்கு கிடைக்காத நிலை உருவாகியுள்ளதாக தமிழக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இது குறித்து பாலாறு பாதுகாப்பு சங்கத் தலைவரும், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில பொதுச் செயலாளருமான ஏ.சி.வெங்கடேசன், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவை ஆந்திர அரசு தொடர்ந்து மீறி வருகிறது. கடந்த 2 வாரங்களாக தடுப்பணைகளை உயர்த்திக் கட்டும் பணி நடந்து வருகிறது. ராமகிருஷ்ணாபுரம், கணேசபுரம், சாந்திபுரம், போகிலிரே, கிடிமாணிபெண்டா ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் உயர்த்தப்பட்டு வருகின்றன. போகிலிரே பகுதியில் ரூ.6 கோடி செலவில் தடுப்பணையை உயர்த்தி கட்டும் பணி தற்போது தொடங்கி நடந்து வருகிறது.

உச்ச நீதிமன்றத்தில் பாலாறு தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது, ஆந்திர அரசு இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. கடந்த முறை ஆந்திர அரசு தடுப்பணைகளை உயர்த்திக் கட்டும்போது தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வழக்கு துரிதப்படுத்தப்படும் என்றும் கூறினார். அதற்கான முயற்சி எந்த நிலையில் உள்ளது எனத் தெரியவில்லை.

ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பணைகளை கட்டியுள்ள நிலையில், தமிழக அரசு 2 தடுப்பணைகள் குறித்து மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் பேசி வருகிறது. எனவே, இந்த முறை 22 தடுப்பணை பணிகளையும் தடுத்து நிறுத்த உரிய ஆதாரங்களுடன் வாதத்தை முன்வைக்க வேண்டும். வழக்கை துரிதப்படுத்த தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும். இரு மாநில முதல்வர்களும் கலந்து பேசி பாலாறு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

அதேநேரத்தில் பாலாறு விவகாரத் தில் ‘நதி நீர் ஆணையம்’ அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையென் றால், தமிழக பாலாற்றில் இனி எப்போ தும் தண்ணீரை நாம் பார்க்க முடியாது. பாலாற்றில் தண்ணீர் வரத்து இல்லை யென்றால், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், விவசாய பாசனமும் பாதிக்கப்படும். இதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x