Published : 23 Jul 2019 04:28 PM
Last Updated : 23 Jul 2019 04:28 PM

பூச்சி பிடிக்கும் வேலை இங்கு எடுபடாது: ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

பிள்ளை பிடிக்கும் வேலையைத்தான் ஸ்டாலின் செய்துகொண்டிருக்கிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் வேலூர் தேர்தல் தொடர்பான கூட்டத்தில் தெரிவித்துள்ளார். 

முன்னதாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற சூழ்நிலையில், வேலூர் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கதிர் ஆனந்த் வீட்டில் மார்ச் 29, 30 தேதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரூ.10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. இதனால், வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே வேலூர் தொகுதிக்கு மீண்டும் ஆகஸ்ட் 5 அன்று இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முன்பு அறிவித்தபடி, புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அதிமுக சார்பிலும் திமுக வேட்பாளராக மீண்டும் கதிர் ஆனந்த்தும் போட்டியிடுகின்றன. 

வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஏ.சி.சண்முகத்தை வெற்றிபெறச் செய்ய இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

போலியான வாக்குறுதிகளைக் கூறி, மக்களை ஏமாற்றி மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுகவை வேரோடு அகற்றவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.     

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது அவர், ''எம்ஜிஆர், தீய சக்தி கருணாநிதியை எதிர்த்துதான் கட்சியை ஆரம்பித்தார். உண்மையான ரத்தம் ஓடும் அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஸ்டாலினின் முயற்சி எடுபடாது. 

பிள்ளை பிடிக்கும் வேலையைத்தான் ஸ்டாலின் செய்துகொண்டிருக்கிறார். பூச்சி பிடிக்கும் வேலை இங்கு எடுபடாது. வேலூர் அதிமுகவின் கூட்டணி. அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்.

துரைமுருகன் அமைச்சராகி, தனது நலனைப் பார்த்தாரே தவிர, மாவட்ட நலனைக் கருத்தில் கொள்ளவில்லை. அமைச்சராக இருந்தவர் ஆந்திராவின் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை ஏன் தடுக்கவில்லை?

கதிர் ஆனந்த் வெற்றிபெற்றால், மத்திய அரசிடமிருந்து திட்டங்களைப் பெறுவேன் என்று தெரிவித்துள்ளார். அவர் காங்கிரஸ் கூட்டணியா? பாஜக கூட்டணியா?'' என்று கேள்வி எழுப்பினார் அமைச்சர் ஜெயக்குமார்.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x