

தருமபுரியில் நேற்று ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. 14 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று முதல் வரும் 28-ம் தேதி வரை ராணுவப் பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களை இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று தொடங்கிய முகாமில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தமிழகம், ஆந்திரா, தெலுங்கானாவுக்கான ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பின் பொறுப்பு அதிகாரி தால்வி தலைமையில் நடந்தது. முகாமினை ஆட்சியர் விவேகானந்தன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ஆட்சியர், எஸ்பி லோகநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். முகாம் தொடங்கியதும் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்திறன் சோதனை, ஓட்டப் பந்தயம், மருத்துவப் பரிசோதனை நடந்தது. இதில் பெரும்பாலான இளைஞர்கள் ஓட்டப்பந்தய தகுதி தேர்வில் வெளியேறினர்.
இதே போல் எடை குறைவாகவும், உயரம் குறைவாகவும் வந்த இளைஞர்களைத் தேர்வு குழுவினர் தகுதியிழப்பு செய்தனர். ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்த சான்றிதழ்கள் எடுத்து வராமல் இளைஞர்கள் பலர் வெளியேறினர். மேலும், தேர்வுக்கு வரும் இளைஞர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.