

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறதா? என்பது தொடர்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த இப்னு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "பெரியார் பேருந்து நிலைய பகுதியில் சிஎஸ்ஐ பள்ளி, சர்ச் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கோயிலுக்குச் செல்லும் பக்தர்களும் பல்வேறு தொல்லைகளை அனுபவிக்க வேண்டியதுள்ளது.
இதனால் இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே டாஸ்மாக் கடையை அகற்ற ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி அமர்வு விசாரித்து, மதுரை மாவட்ட இலவச சட்ட பணிகள் ஆணையம் டாஸ்மாக் கடை அமைந்திருக்கும் பகுதியில் ஆய்வு நடத்தி அது தொடர்பான அறிக்கையை ஆகஸ்ட் 13-ல் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.