Last Updated : 23 Jul, 2019 02:57 PM

 

Published : 23 Jul 2019 02:57 PM
Last Updated : 23 Jul 2019 02:57 PM

நடிகர் சூர்யா எழுப்பிய 10 கேள்விகளுக்குப் பதில் எங்கே?- மத்திய அரசுக்கு ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா எழுப்பிய 10 கேள்விகளுக்குப் பதில் எங்கே என மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்
மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் .

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று (ஜூலை 23) செய்தியாளர்களை சந்தித்த அவர், "மத்திய அரசை விமர்சித்தால் தேச துரோக வழக்கு பாயும் நல்லவேளையாக நடிகர் சூர்யா மீது இதுவரை தேச விரோத வழக்கு பாயவில்லை.

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா கூறிய கருத்துகள் அத்தனையும் சரியானவை. ஆகவே, அவரை தனிமைப்படுத்தி பாஜக உள்ளிட்ட அமைப்புகள் விமர்சனம் செய்வது தவறு. அவர் எழுப்பிய 10 கேள்விகளுக்கு பதில் கூற பாஜகவால் முடியவில்லை.

நாடு முழுவதும் கல்வித் துறையில் இருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பதிலாகக் கல்வியை தனியார்மயம் ஆக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை இருக்கிறது.

20 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் அரசுப் பள்ளிகளை மூட வேண்டும் என கஸ்தூரிரங்கன் அறிக்கை சொல்லி சொல்கிறது. அப்படி இருக்கும்போது 3 வயது முதல் 18 வயதான குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி அளிப்பது என்பது எவ்வாறு சாத்தியப்படும். 

இதன்மூலம் தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகவே வாய்ப்பு ஏற்படும். தமிழகத்தில் இப்போதே 50 சதவீத கல்வி நிறுவனங்கள் தனியார் வசம் உள்ளது. உயர் கல்வியில் 75 சதவீதம் கல்வி நிறுவனங்கள் தனியார் கைகளில் உள்ளன. புதிய கல்விக் கொள்கை இதை மேலும் ஊக்குவிக்கும்.

கேரளாவில் கடந்த 3 ஆண்டுகளில் 1.5 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாறியுள்ளனர். தமிழகத்திலும் அரசு பள்ளிகளை மூடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

புதிய கல்வி கொள்கையை நாம் ஏற்றுக் கொண்டால் மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இருக்காது. புதிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக கைவிட வலியுறுத்தி வரும் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஒரு கோடி கையெழுத்து பெறுவது எனவும் 5000 தெருமுனை கூட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவை தாக்கல் செய்கிறது இதனை கைவிட வேண்டும் இதனால் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படுகிறார்கள்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x