

புதுச்சேரி
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு விருதுகளைத் தர மத்திய அரசிடம் பரிந்துரைக்க உள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் சந்திராயன் 2 விண்கலம் வெற்றிகரமாகச் செலுத்தியது தொடர்பாக இஸ்ரோவுக்கும், விஞ்ஞானிகளுக்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வைப் பாராட்டி அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் வாழ்த்திப் பேசினர்.
இறுதியில் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "க்ரையோஜானிக் இன்ஜின் தராததால் நாமே தயாரித்து ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் பொருத்திய பெருமை நம் விஞ்ஞானிகளுக்கு உண்டு. ஹீலியம் திரவமே எரிபொருளாக உள்ளது.
செப்டம்பர் 6 அல்லது 7-ம் தேதிகளில் நிலவு தென்பகுதியில் ரோவர் இன்ஜின் இறங்கும். அதன்பிறகு புகைப்படம் பூமிக்கு அனுப்பும். அதிலிருந்து செய்திகள் கிடைக்க வாய்ப்புண்டு.
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளுக்குப் பிறகு மிகப்பெரிய சாதனையை இந்தியா படைத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளை முந்தி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழர் தலைமை வகிக்கிறார். விருதுகளைத் தர பரிந்துரைப்போம். இதற்குப் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.
-செ,ஞானபிரகாஷ்