Published : 23 Jul 2019 11:52 am

Updated : 23 Jul 2019 11:52 am

 

Published : 23 Jul 2019 11:52 AM
Last Updated : 23 Jul 2019 11:52 AM

தீண்டாமை கடைபிடிக்காத கிராமத்திற்கு ரூ.10 லட்சம் பரிசு; விழுப்புரம் மாவட்டத்தில் கிராமங்களை ஆய்வு செய்யும் அதிகாரிகள்

10-lakhs-prize

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் தீண்டாமை கடைபிடிக்காத கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்குவதற்காக கிராமங்களை தேர்வு செய்யும் பணியில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை ஈடுபட்டுள்ளது.


இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:

2017-18, 2018-19-ம் ஆண்டுகளுக்கான தீண்டாமை கடைபிடிக்காத கிராமங்கள் தொடர்பாக மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு டிஎஸ்பி அவர்களால் மாவட்டத்தில் 7 கிராமங்களில் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அவரது அறிக்கையில் தேவையான புள்ளி விவரங்கள் இல்லாததால் மாவட்டத்தில் உள்ள 13 தாலுகாக்களில் தலா 2 கிராமங்களை ஆய்வு செய்து, அதில் மாவட்டத்திற்கு ஒரு கிராமத்தை தேர்வு செய்யலாம் என ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்வு குழுவால் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகையை பெற கீழ்கண்ட நிபந்தனைகள் அக்கிராமத்தில் கடைபிடிக்க வேண்டும்.

நிபந்தனைகள்

கிராமத்தில் உள்ள பொது மயானத்தை அனைவரும் பயன்படுத்தி வர வேண்டும். இந்த கிராமங்களில் பொதுக் கிணறுகளில் அனைத்து சமுதாயத்தினரும் தண்ணீர் எடுத்து பயன்படுத்த வேண்டும். டீக்கடைகளில் அனைத்து இனமக்களும் சமத்துவமாக அமர்ந்து டீ குடிக்க வேண்டும். கோயில்களில் நடைபெறும் விழாக்களில் அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொள்ள வேண்டும். திருவிழாக்களில் சமத்துவமாக உணவு உட்கொள்ள வேண்டும். இதர இனமக்கள் தங்கள் வீடுகளில் நடைபெறும் விழாக்களுக்கு ஆதிதிராவிடர் மக்களை அழைக்க வேண்டும். அதேபோல் ஆதிதிராவிடர் மக்கள் இல்ல விழாக்களில் இதர இனமக்கள் கலந்து கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட கிராமத்தில் தீண்டாமை மற்றும் மதசார்புடைய வழக்குகள் ஏதும் காவல்துறை ஆவணங்களில் இல்லை என்ற விவரம் பெற வேண்டும்.

இந்த நிபந்தனைகளை கடைபிடிக்கும் உளுந்தூர்பேட்டை அருகே ஆதனூர் கிராமத்தை ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் ஜெயலட்சுமி தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது. மற்றொரு கிராமத்தை தேர்வு செய்ய ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதேபோல் மற்ற தாலுகாவில் உள்ள கிராமங்களை தேர்வு செய்யும் பணியில் அந்தந்த வட்டாட்சியர்கள் ஈடுபட்டுள்ளனர். 13 தாலுகாக்களில் தேர்வு செய்யப்படும் 26 கிராமங்களில் 2 நிதியாண்டுகளுக்கு 2 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட உள்ளது.

பொதுமக்கள் தங்களுக்கு தெரிந்த கிராமத்தை ஆதிதிராவிடர் நல வட்டாட்சியரிடம் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.கிராமங்களை தேர்வு செய்யும் பணியில் அந்தந்த வட்டாட்சியர்கள் ஈடுபட்டுள்ளனர்.2 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட உள்ளது.

தீண்டாமை10 லட்சம் பரிசு

You May Like

More From This Category

More From this Author