Last Updated : 20 Jul, 2015 08:39 AM

 

Published : 20 Jul 2015 08:39 AM
Last Updated : 20 Jul 2015 08:39 AM

டிப்ளமோ நர்ஸிங் படிப்புக் காலம் 3 ஆண்டுகளாக குறைப்பு: நடப்பு கல்வி ஆண்டில் இருந்து அமலுக்கு வருகிறது

அரசு மற்றும் தனியார் செவிலியர் பள்ளிகளில் மூன்றரை ஆண்டு டிப்ளமோ படிப்பை 3 ஆண்டுகளாக குறைத்து இந்திய நர்ஸிங் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மூன்றரை ஆண்டு டிப்ளமோ நர்ஸிங் படிப்பில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்கள் 3 ஆண்டு படிப்பு மற்றும் 6 மாதம் மருத்துவமனையில் பயிற்சி பெறுகின்றனர். இந்நிலையில் மூன்றரை ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ நர்ஸிங் படிப்பை 3 ஆண்டாக குறைத்து இந்திய நர்ஸிங் கவுன்சில் (ஐஎன்சி) உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நடப்பு கல்வி ஆண்டில் இருந்து அமலுக்கு வருகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழும (நர்ஸிங் கவுன்சில்) பதிவாளர் ஆனி கிரேஸ் கலைமதி கூறியதாவது:

நாடு முழுவதும் உள்ள செவிலியர் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு டிப்ளமோ நர்ஸிங் படிப்பு 3 ஆண்டாக இருந்தது. இந்த 3 ஆண்டுகளிலேயே படிப்பும், பயிற்சியும் ஒருங்கிணைந்து இருந்தன. அதன்பின் 3 ஆண்டு படிப்பு, 6 மாத பயிற்சி என தனித்தனியாக பிரிக்கப்பட்டது. தற்போது மீண்டும் படிப்பும், பயிற்சியும் ஒருங்கிணைத்து டிப்ளமோ நர்ஸிங் படிப்பை 3 ஆண்டுகளாக குறைத்து இந்திய நர்ஸிங் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டில் இருந்து இதை நடைமுறைப்படுத்துமாறு தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் செவிலியர் பள்ளிகளுக்கு தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் டிப்ளமோ நர்ஸிங் படிப்புக்கான கலந்தாய்வு அரசு செவிலியர் பள்ளிகளுக்கு மட்டும் நடத்தப்படுகிறது. தனியார் செவிலியர் பள்ளிகளுக்கு கலந்தாய்வு நடத்தப்படுவதில்லை. தனியார் செவிலியர் பள்ளிகளில் நிர்வாகமே மாணவ, மாணவிகளை சேர்த்துக்கொள்கின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற செவிலியர் பள்ளிகள், கல்லூரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எ.சிதம்பரம் கூறியதாவது:

10 ஆண்டுகளுக்கு முன்பு டிப்ளமோ நர்ஸிங் படிப்புக்கான கலந்தாய்வு அரசு மற்றும் தனியார் செவிலியர் பள்ளிகளுக்கு சேர்த்தே நடத்தப்பட்டது. அப்போது தனியார் பள்ளிகள் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது 200-க்கும் மேற்பட்ட தனியார் செவிலியர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

அதனால் அரசு செவிலியர் பள்ளிகளுக்கு மட்டும் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வில் தனியார் செவிலியர் பள்ளிகளையும் சேர்க்கக்கோரி அரசிடம் பல முறை முறையிட்டோம்.

அதன் பலனாக தனியார் பள்ளிகளுக்கும் சேர்த்து கலந்தாய்வு நடத்த வேண்டும், தனியார் செவிலியர் பள்ளிகள் மாநில அரசுக்கு 65 சதவீதம் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து அனைத்து தனியார் செவிலியர் பள்ளிகளிடம் இருந்தும் மருத்துவக் கல்வி இயக்ககம் விவரங்களை கேட்டு வாங்கியது. ஆனால் இந்த ஆண்டும் அரசு செவிலியர் பள்ளிகளுக்கு மட்டும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. தனியார் செவிலியர் பள்ளிகளையும் சேர்த்தே கலந்தாய்வு நடத்த வேண்டும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x