

டி.ஜி.ரகுபதி
முன்பெல்லாம் பெரும்பாலான வீடுகளில் திண்ணை இருந்தது. வீட்டின் முன்புறம் இருக்கும் திண்ணையில் தாத்தா, பாட்டி போன்ற மூத்தோர்கள் அமர்ந்து பழங்கதைகளைப் பேசிக்கொண்டு, அந்த சாலை வழியாகச் செல்வோரை கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். பின்னர், வீடுகளின் வடிவமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டன. வீட்டைச் சுற்றிலும் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. பாதுகாப்புக்காக வீடுகளில் நாய்கள் வளர்க்கப்பட்டன.
பின்னர், காலமாற்றத்துக்கு ஏற்ப கண்காணிப்பை பலப்படுத்தும் முறைகளிலும், மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதன்படி, தற்போதைய முக்கிய கண்காணிப்பு சாதனமாக சிசிவிடி கண்காணிப்புக் கேமராக்கள் உள்ளன. மாநிலம் முழுவதும் பொது இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராவை அமைத்து, பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையை காவல் துறை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் சார்பிலும், தங்களது வீடுகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா அமைத்துக் கொள்கிறார்கள்.
நவீன கண்காணிப்பு கேமராக்கள்!
தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் கோவை மாநகரம் முதன்மையானது. மாநகராட்சியில் 100 வார்டுகளில் 3,500-க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. மாநகர காவல் ஆணையர் தலைமையில், 3 துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 2,500-க்கும் மேற்பட்டோர் மாநகர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கிய சாலைகளான திருச்சி சாலை, அவிநாசி சாலை, பாலக்காடு சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, பொள்ளாச்சி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இந்த சாலைகள் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. மாநகர காவல் துறை சார்பில், சாலை விபத்துகளைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துகளைத் தவிர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து போலீஸார் வாகன தணிக்கை மேற்கொண்டு, விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.
கோவை மாநகரில் 62 இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. இவற்றில் சுமார் 200 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 32 எல்இடி டிவி-க்கள் இணைக்கப்பட்ட மெகா திரை மூலம், 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
மேலும், கேமரா பதிவுகள் சேமித்து, பாதுகாக்கப்படுகின்றன. முக்கிய இடங்களில் உள்ள கேமராக்கள் நைட் விஷன், 360 டிகிரி சுழலும் தன்மை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளது. இவை தவிர, மாநகரம் முழுவதும் 3,500-க்கும் மேற்பட்ட கேமராக்கள் நகரில் வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல, `உயிர்’ தன்னார்வ அமைப்பின் உதவியுடன், மாநகரில் நவீனக் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “உயிர் அமைப்பின் உதவியுடன் முதல்கட்டமாக, அவிநாசி சாலை உப்பிலிபாளையம் சிக்னல் சந்திப்பில் இருந்து, எல்ஐசி சிக்னல் சந்திப்பு, அண்ணா சிலை சிக்னல் சந்திப்பு, குப்புசாமி நாயுடு மருத்துவமனை சிக்னல் சந்திப்பு, லட்சுமி மில் சிக்னல் சந்திப்பு ஆகிய 5 இடங்களில் நவீன சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த நவீன கேமராக்களில், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்களின் வாகன எண், விதிமீறல் வகை உள்ளிட்டவை துல்லியமாக பதிவாகிவிடும். பின்னர், பிரத்தியேக மென்பொருளான `வாகன்’ மூலம் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநரின் முகவரி கண்டறியப்பட்டு, விதிமீறலுக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும்.
மேலும், மாநகரில் விபத்துகளை தடுக்க முக்கிய இடங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பிளாஸ்டிக் கம்பங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. உயிர் அமைப்பு சார்பில், 3,000 ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பிளாஸ்டிக் கம்பங்கள் மாநகர காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளன. ஒரு கம்பத்தின் மதிப்பு ரூ.600. இந்த 3,000 ஒளிரும் கம்பங்களும், அரசு மருத்துவமனை சாலை, ரயில் நிலையம், கூட்ஸ்ஷெட் சாலை, மாநகர காவல் ஆணையர் அலுவலக சாலை என மாநகர் முழுவதும் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்டு வருகின்றன. தெருவிளக்கு எரியா விட்டாலும்கூட, அப்பகுதியில் இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் பாதுகாப்பாக செல்ல முடியும்.
அதேபோல, போக்குவரத்து போலீஸார் பணிபுரியும்போது, ஆடையில் பொருத்தியபடி கண்காணிக்கக் கூடிய, ரூ.20.50 லட்சம் மதிப்பிலான அதிநவீன 70 கண்காணிப்புக் கேமராக்களும் மாநகர போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன. சுமார் 8 மணி நேரத்துக்கான காட்சிகளை அதில் பதிவு செய்துகொள்ள முடியும். மேலும், இதில், 20 கேமராக்கள் நேரலை வசதியும் கொண்டுள்ளன. அவிநாசி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட 11 இடங்களில் புதிதாக போக்குவரத்து சிக்னல்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு ஏன்?
கோவை-அவிநாசி சாலையில் 5 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம், சாலை விதிமீறல்கள் தொடர்பாக 4 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ. 6 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. திருச்சி சாலையிலும் விரைவில் நவீன கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல் துறை மின்னணு கண் செயலியை (போலீஸ் `இ ஐ’ ஆப்) இதுவரை 16 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதன் மூலம் 9 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. அபராத தொகையாக ரூ.71 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மாநகரில் தொடர்ந்து கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும், குற்றம் நடைபெற்றால், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கண்டறிந்து, கைது செய்யவும் கண்காணிப்பு கேமராக்கள் பயனுள்ளதாக உள்ளன. மேலும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் உதவுகின்றன.
மேலும், ஓரிடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், இந்த கேமரா மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து, உடனடியாக அந்த இடத்துக்கு போலீஸாரை அனுப்பி, போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த முடியும். கோவை மாநகரில் கண்காணிப்பு நடவடிக்கைகள், காலத்துக்கு ஏற்றாற்போல நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன” என்றனர்.