Published : 23 Jul 2019 11:25 AM
Last Updated : 23 Jul 2019 11:25 AM

மாற்றத்தை ஏற்படுத்திய மந்திரம்!- எழுத்தாளர், பேச்சாளர், மனிதவளப் பயிற்சியாளர் `ஈரோடு கதிர்’

எஸ்.கோவிந்தராஜ்

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர்  சொன்ன ஒரு மந்திரம்தான் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. வாய்ப்புகளைத் தவறவிடாதே என்பதுதான் அந்த மந்திரத்தின் உட்பொருள். நம் வாழ்க்கை உயர இதுபோன்ற ஒரு சொல், ஒரு செயல் போதும்” என்கிறார்  எழுத்தாளர், பேச்சாளர், மனிதவளப் பயிற்சியாளர் என பன்முகம் கொண்ட ஈரோடு கதிர் (எ) கதிர்வேலு பழனிசாமி.
பள்ளி, கல்லூரிகள், இலக்கியக் கூட்டங்கள், புத்தகத் திருவிழாக்களில் இவர் தவிர்க்க முடியாத ஆளுமை. இவர் எழுதியவை நான்கு புத்தகங்கள். அவற்றில் இரண்டு பிரபல வார இதழ்களில் தொடராக வெளிவந்தவை. இவைதவிர, இணையத்திலும் 850 படைப்புகள் எழுதியுள்ளார்.

தமிழகம் முழுக்க பேச்சாளராக அறியப் பட்டுள்ள இவர், தமிழகம் மட்டுமின்றி, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் உரையாற்றியுள்ளார். பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் சிறப்பு அழைப்பாளராக, மனிதவளப்  பயிற்சியாளராகவும் தொடர்கிறார். தொலைக்காட்சி, வார, மாத இதழ்கள், பண்பலை என பெரும்பாலான ஊடகங்களிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

ஈரோடு அருகேயுள்ள சின்னியம்பாளையம்தான்  கதிரின் ஊர். அரசு ஆரம்பப் பள்ளியில் தொடங்கி, ஈரோடு கலை, அறிவியல் கல்லூரி வரை கல்விப் பயணம். எழுத்தாளராக, பேச்சாளராக மாற கதிருக்கு அடித்தளம் அமைத்துத் தந்தது அவர் நடத்திவரும் ‘சிகரம்’அச்சகம்.  ஏறத்தாழ 19 ஆண்டுகள் அச்சகப் பணியில் இருந்துவிட்டு, 2008-ல் இணையத்துக்கு மாறினார். அவரிடம் பேசினோம்.

“ஈரோட்டை விட்டு விலகிய, உள்ளடங்கிய கிராமத்தில், அரசுப் பள்ளியிலேயே படித்து, நகர்ப்புறத்துக்கு இடமாற்றம் செய்வது அத்தனை எளிதானதல்ல. பார்வையில்படும் எதுவுமே மிரட்சியூட்டும். இயல்பாகவே மொழி, பழக்கவழக்கம், அனுபவம், தகவல்கள், அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையில் தன்னம்பிக்கை தளர்ந்திருக்கும். அப்படியான பின்னணியில் இருந்து நகரத்துக்குள் நுழைந்து, எழுத்தாளராக, பேச்சாளராக தகவமைத்துக்கொள்ள முயன்றவன் நான்.

சமூகவலைதளங்களில் தொடங்கிய பயணம்...

மனித வாழ்க்கையில் ஒவ்வொரு பத்து ஆண்டுகளும், சில எதிர்பாராத மாயங்களை நிகழ்த்திவிடுகிறது. கல்லூரி நாட்களில் துணுக்கு, கவிதை என கிறுக்கிக் கொண்டிருந்தாலும், ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஒரேயொரு வரிகூட எழுதாத சூனிய வெளியில் இருந்த எனக்கு, 2008-ல் இணையத்தின் வாயிலாக எழுத முடியும் என்பது தெரிய வந்தது.

என்னைச் சுற்றி நடப்பதை பகிரத் தொடங்கிய பயணம், இன்று பலரது வாழ்க்கையை செழுமைப்படுத்தும் புத்தகம் வரை தொடர்கிறது. 

உணர்வுகளையும், மனதில் தேங்கிய காட்சிப் படிமங்களையும் சொற்களாக மாற்றிப் பதியத் தொடங்கியதுதான் எழுத்துத் துறையின் ஆரம்பம். இதில், பெரிய வாய்ப்புக் களமாக அமைந்தவை சமூக வலைதளங்களான ப்ளாக், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவை.

இப்படி சமூக வலைதளங்களில் மட்டுமே எழுதிக் கொண்டிருந்த எனக்கு `நம் தோழி’ மாத இதழில் தொடர் கட்டுரைகள் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதில் வெளியான, உலகத் திரைப்படங்கள் குறித்த கட்டுரை, என்னை வெளியுலகுக்கு அறிமுகம் காட்டியது. தொடர்ந்து, குங்குமம் வார இதழில் ‘உறவெனும் திரைக்கதை’ என்ற தலைப்பில் 25 வாரங்கள் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.
மாணவ, மாணவிகளை சந்திக்கும் வாய்ப்பு மற்றும் அனுபவங்களை முன்வைத்து,  பெற்றோர், ஆசிரியர்,  மாணவர்களுக்கான, ‘வேட்கையோடு விளையாடு’ கட்டுரைத் தொடர் புதிய தலைமுறையின் கல்வி வார இதழில் வெளிவந்தது. கிளையிலிருந்து வேர் வரை, பெயரிடப்படாத புத்தகம், உறவெனும் திரைக்கதை, வேட்கையோடு விளையாடு ஆகிய நான்கு புத்தகங்களுமே இரண்டாம் பதிப்பைக்  கண்டுள்ளன. குறிப்பாக, ‘வேட்கையோடு விளையாடு’ வெளியான 5  மாதங்களில்  இரண்டாம் பதிப்பைக் கண்டது.

ஓராண்டில் 25 ஆயிரம் மாணவர்கள்...

எழுத்தாளர் என்ற நிலையைத்  தொடர்ந்துகொண்டு, பேச்சாளர், மனிதவள மேம்பாட்டுப்  பயிற்சியாளராக மாறினேன். ஓராண்டில் சராசரியாக 25 ஆயிரம் மாணவ,  மாணவிகளை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் கிடைத்த அனுபவங்களே  ‘வேட்கையோடு விளையாடு’ கட்டுரைத் தொடர்கள்.  பதின் பருவ  மாணவி தொடங்கி, 50  வயது நிரம்பிய மகப்பேறு மருத்துவர் வரை  பலரையும் இந்தப் புத்தகம் ஆழ்ந்து யோசிக்கவும், தன்னை உணர்ந்து கொள்ளவும் வைத்துள்ளது.

புத்தக திருவிழாக்கள், பொது அமைப்புகள், பள்ளி, கல்லூரி ஆண்டு விழாக்கள் என பல்வேறு மேடைகளில் பேசி வருகிறேன்” என்கிற கதிர்,  இன்றைய கல்விச்சூழல், இளைய தலைமுறையின் எதிர்மறை எண்ணங்கள், சமூகத்தை அவர்கள் அணுகும் முறை, பெற்றோருடனான உறவு-முரண் ஆகியவை குறித்து அதிகம் கவலைப்படுபவராக உள்ளார்.

இதற்காக, பிள்ளைகள் மீது பெரும் நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கான பல்வேறு பயிலரங்குகளை நடத்தி வருகிறார். இளைய தலைமுறையை நெறிப்படுத்த, அவர்களது சூழலைப் புரிந்துகொண்டு, அவர்களோடு இணைந்து, அவர்களை மாற்ற வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு வலியுறுத்துகிறார்.

“பயிலரங்குகளில் மாணவர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்தாலும், உண்மையில் பெற்றோரிடமே உரையாட வேண்டிய தேவையே அதிகம் உள்ளது. கல்வி என்பதே வாழ்வின் ஆதாரம் என்று மாறிவிட்ட இக்காலத்தில், முழுப் பொறுப்பையும் ஆசிரியர்கள், பிள்ளைகள் மீது மட்டுமே  சுமத்திவிட்டு, செலவு செய்வது மட்டுமே தமது பொறுப்பு என்பதே பெற்றோரின் மனநிலையாக உள்ளது. பிள்ளைகளை வடிவமைப்பதில், தயார்படுத்துவதில் பெற்றோர்களும் முன்நிற்க வேண்டும்” என்கிறார் கதிர்.

சமூக வலைதளங்களை நேர்மறையாக பயன்படுத்தும் வகையில், நண்பர்களுடன் இணைந்து ‘ஈரோடு வாசல்’ எனும் வாட்ஸ்அப்  குழு வாயிலாக இரண்டு ஆண்டுகளில் பலரையும்  பேச்சாளராக, எழுத்தாளராக, படைப்பாளியாக, கதை சொல்லியாக, வாசிப்பாளராக மாற்றியிருக்கிறார்.

“இந்த  மாற்றங்களுக்குப் பின்னால் இருப்பது,  20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சக பயிற்சியாளர் சொன்ன மந்திரம்தான். `ஒரு வாய்ப்பு வரும்போது முடியாது என்று நீ கை விட்டால், வேறு யாரும் அதை செய்யாமல் இருக்கப்போவதில்லை. அந்த வாய்ப்பை யாரோ ஒருவர் செய்யத்தான் போகிறார். அந்த யாரோ ஒருவராக நீயே ஏன் இருக்கக் கூடாது’  என்பதுதான் அந்த மந்திரம். ஏதோ ஒரு புள்ளி, ஒரு சொல், ஒரு செயல் போதும். உடைவதற்கும்... உயர்வதற்கும்...” நம்பிக்கையுடன் கூறி விடை கொடுத்தார் ஈரோடு கதிர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x