

கோவை
குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்காததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும், மகளின் இறப்புக்குக் காரணமான தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் குறைகளைத் தெரிவித்து மனுக்கள் அளித்தனர்.
பூசாரிபாளையம் நாயக்கர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஜெ.புவனேஸ்வரன் அளித்த மனுவில், ‘என்னுடைய மகள் யுரேகா (18), ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தாள். குத்துச்சண்டை வீராங்கனையான அவர், பல்வேறு போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்.இந்நிலையில், கடந்த 30-ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாள்.
குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்ள கல்லூரி நிர்வாகத் தினர் அனுமதி அளிக்காததால், இந்த முடிவை எடுத்தாள். ஆனால், மற்ற மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மகளின் தற்கொலைக்குக் காரணமான கல்லூரி நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, ''குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்ள மாணவியின் வருகைப் பதிவுடன் அனுமதி கொடுத்தோம். போட்டியில் பங் கேற்கச் சென்று வர அவருக்குப் பண உதவியும் செய்து கொடுத்தோம். இதற்கான ஆதாரங்கள் செல்வபுரம் காவல் நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மாணவியின் இறப்பு எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கு கல்லூரி பொறுப்பல்ல என்பதை தெளிவுபடுத்துகிறோம்’’ என்றனர்.
கல்விச் சான்றிதழ்
திருமலையம்பாளையத்தைச் சேர்ந்த வேலுச்சாமி மகள் வே.வர்ஷா அளித்த மனுவில், ''நான் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, கடந்த ஆண்டு ஒத்தகால் மண்டபத்திலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக, அங்கு படிப்பைத் தொடர முடியவில்லை. இதனால், குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்தேன். ஒரு மாதத்துக்குள் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க, பள்ளியில் அவகாசம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், பாலிடெக்னிக் கல்லூரியில் என்னுடைய கல்விச் சான்றிதழ்களைத் தர மறுக்கின்றனர். ரூ.30 ஆயிரம் செலுத்திவிட்டு, சான்றிதழ்களைப் பெற்றுச் செல்லுமாறு தெரிவிக்கின்றனர். சான்றிதழ்களை சமர்ப்பித்தால்தான் என்னுடைய படிப்பைத் தொடர முடியும். எனவே, என்னுடைய சான்றிதழைப் பெற்றுத் தர வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இழப்பீடு வேண்டும்
கணபதியைச் சேர்ந்த இந்திரா (61) என்பவர் அளித்த மனு விவரம்:
''என்னுடைய கணவர் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். அதற்கு அரசுத் தரப்பில் ரூ.6 லட்சம் தருவதாகத் தெரிவித்தனர். ஆனால், ரூ.60 ஆயிரம் மட்டுமே கொடுத்தனர். 14 ஆண்டுகள் ஆகி றது. இதுவரை 19 முறை மனு அளித்துவிட்டேன். இதுவரை, எனக்கு அந்தப் பணம் கிடைக்கவில்லை. என்னுடைய மகள்கள் திருமணமாகிச் சென்றுவிட்டனர். நான் தனியாக வசித்து வருகிறேன். என்னுடைய வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, எனக்கான இழப்பீட்டை முழுமையாக வழங்க வேண்டும்''.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.