Published : 23 Jul 2019 08:51 AM
Last Updated : 23 Jul 2019 08:51 AM

31,406 பேருக்கு ரூ.112 கோடி வங்கிக் கடன்; சுயஉதவி குழுக்களின் கடன் 99% வசூல்: சேலத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்

சேலம் மாவட்டம் ஓமலூரில் தமிழ்நாடு கிராம வங்கியின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு காசோலையை வழங்குகிறார் முதல்வர் பழனிசாமி.படம் : எஸ்.குரு பிரசாத்

சேலம்

சேலத்தில் நடந்த விழாவில் 31,406 பேருக்கு ரூ.112 கோடி வங்கிக் கடன் வழங்கிய முதல்வர் பழனிசாமி, மற்ற வங்கிகளின் வாரா கடன் 10 சதவீதமாக உள்ள நிலை யில், தமிழ்நாடு கிராம வங்கியின் வாரா கடன் 1.79 சதவீதமாக உள்ளதாகவும், சுயஉதவி குழுக்க ளுக்கு கடன் வழங்கியதில் 99 சதவீ தம் பேர் திருப்பி செலுத்துவதாகவும் கூறினார்.

சேலம் கருப்பூர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கிராம வங்கியின் சார்பில் மாநில அளவிலான வங்கிக் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு, 31 ஆயிரத்து 406 பயனாளிகளுக்கு, விவசாய பயிர் கடன், தொழில் கடன், வீட்டுக் கடன், மீனவர்களுக்கு கடன், சுய உதவிக்குழு கடன் என ரூ.112 கோடி மதிப்பிலான கடன்களை வழங்கி னார். மேலும், பெருநிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின்கீழ் 10 பள்ளி களுக்கு தலா ரூ.40 ஆயிரம் வீதம் ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது: தமிழ்நாடு கிராம வங்கி 630 கிளைகளுடன் இயங்கி வருகிறது. விரைவில், ஆயிரம் கிளைகளை எட்டவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வங்கி ரூ.23 ஆயிரம் கோடி வர்த்தகம் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

மற்ற வங்கிகளின் வாரா கடன் 10 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழ்நாடு கிராம வங்கியின் வாரா கடன் 1.79 சதவீதமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், கடன் பெறுபவர்கள் நியாயமான முறை யில் திருப்பி செலுத்தி விடுகின்றனர். இந்த வங்கி பணக்காரர்களுக்கு கடன் வழங்காமல், ஏழை, எளிய மக்களுக்கு கடன் வழங்கி, அவர்க ளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, கந்துவட்டி கொடுமையில் இருந்து மக்களை காத்து அரும் பணியாற்றி வருவது வரவேற்புக்குரியது.

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கியதில், 99 சதவீதம் திருப்பி செலுத்தி விடுகின்றனர். இதனால், மகளிர் குழுவினருக்கு வங்கியில் பிணையம் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. கடந்த 8 ஆண்டு களில் மாநில அளவில் 87,305 சுயஉதவிக்குழுவுக்கு ரூ.2,378 கோடி கடனுதவி வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு ரூ.624 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.646.80 கோடி கடனுதவி வழங்கி 104 சதவீதம் இலக்கை எட்டியுள் ளது. நடப்பாண்டு ரூ.650 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ண யித்து, தற்போது வரை ரூ.65.45 கோடி கடனுதவி தரப்பட்டுள்ளது.

கால்நடை வாங்க ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

‘வற்புறுத்தி நிலம் பெற மாட்டோம்’

முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேட்டூர் அணை நீரை தற்போது திறந்தால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, தண்ணீர் கிடைக்காமல், பயிர் முதிர்ச்சி பெறும்போது பதராகப் போய்விடும். நீர்வரத்தை பொருத்தே ஆடி 18-க்கு தண்ணீர் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, 70 விவசாயிகள் நிலங்களை எடுத்துக்கொள்ள சம்மதம் தெரிவித்தும், அதற்கு பதிலாக அரசு வேலைவாய்ப்பு கேட்டும் மனு அளித்துள்ளனர்.

8 வழிச்சாலைக்காக யாரையும் வற்புறுத்தியோ, மன சங்கடத் துக்கு உள்ளாக்கியோ நிலத்தை பெறவேண்டும் என்ற எண்ணம் ஒரு சதவீதம்கூட அரசுக்கு கிடையாது. தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டுவது தொடர்பாக நெல்லை, கோவையில் பலரை கைது செய்திருக்கின்றனர். இலங்கையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குகூட தமிழக உளவுத் துறை எச்சரிக்கை கொடுத்தது. அதை அவர்கள் சரியாக பொருட்படுத்தவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x