

சென்னை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்டாயப்படுத்தி தன்னை மாநிலங்களவை உறுப்பினராக்கி இருப்பதாக மதிமுக பொதுச்செய லாளர் வைகோ கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதற்காக நேற்று காலை டெல்லி புறப்பட்ட வைகோ சென்னை விமான நிலை யத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
23 ஆண்டுகளுக்குப் பிறகு
1978 முதல் 1996 வரை 18 ஆண்டுகள் அதாவது 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் 1998 முதல் 2004 வரை மக்க ளவை உறுப்பினராகவும் இருந் திருக்கிறேன். 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க இருக் கிறேன்.
1978-ல் முதல்முறையாக எம்.பி. ஆனபோது முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் என்னை ஆதரித்தார். வழிகாட்டியாக விளங்கினார். 3 முறை கருணாநிதி என்னை எம்பி ஆக்கினார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை கட்டா யப்படுத்தி மாநிலங்களவை உறுப் பினராக்கியுள்ளார். அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்தியில் 2-வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற நிலை யில் தமிழகம் பல்வேறு அபாயங் களை எதிர்நோக்கி இருக்கிறது. காவிரியின் குறுக்கே மேகேதாட் டுவில் அணை கட்ட கர்நாடகம் முயற்சிக்கிறது. அதற்கு மத்திய பாஜக அரசு உதவுகிறது. இதனால் தமிழகம் பாலைவனமாகும் ஆபத்து உள்ளது.
தமிழகத்தில் வளம் கொழிக்கும் வேளாண் பகுதிகளான காவிரி பாசன மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல் படுத்த மத்திய பாஜக அரசு அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. இத்திட்டம் வந்தால் தமிழகம் சிறிது சிறிதாக சகாரா பாலைவனமாகும்.
அணைகளுக்கு ஆபத்து
அணுக்கழிவுகளை தமிழகத் தில் புதைக்கவும் திட்டமிடுகிறார் கள். இதனால் முல்லை பெரியாறு, இடுக்கி அணைகளுக்கு ஆபத்து ஏற்படும். நீட் தேர்வு, இந்தி, சமஸ் கிருத திணிப்பு என தமிழகத்துக்கு எதிராக மோடி அரசு செயல் படுகிறது.
மக்கள் உரிமைகளுக்காக சட்ட நகலை எரித்து சிறை சென்றவன் நான். பொடா சட்டத்தில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டவன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாடாளுமன்றம் செல்கிறேன். இப்போதைய எம்.பி.க்களுடன் எனக்கு பழக்கம் இல்லை. தமிழகத்தின் உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.
இவ்வாறு வைகோ கூறினார்.