

நிலம் தருகிறோம்; வேலைவாய்ப்பு மட்டும் கொடுங்கள் என்று 70 விவசாயிகள் மனு கொடுத்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தமிழ்நாடு கிராம வங்கி சார்பில் வங்கிக் கடன் வழங்கும் விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி, 31 ஆயிரத்து 406 பயனாளிகளுக்கு ரூ.112 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''இன்றுகூட 70 விவசாயிகள் வந்து, நிலம் தருகிறோம்; வேலைவாய்ப்பு மட்டும் கொடுங்கள் என்று தெரிவித்துள்ளனர். எங்களின் நிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; விரைவுச் சாலை வரட்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மனுக்களையும் இன்று காலை கொண்டு வந்து கொடுத்தனர். விரைவுச்சாலையைப் பல பேர் விரும்புகின்றனர். சில பேர் எதிர்க்கின்றனர். யாரையும் வற்புறுத்தியோ, மனச் சங்கடத்துக்கு ஆளாக்கியோ நிலத்தைப் பெறவேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு 1% கூடக் கிடையாது.
விவசாயிகள் பாதிக்கும்படி நடந்துகொள்ள மாட்டோம். அவர்களுக்கு நாங்கள் எதிரிகள் இல்லை. நானும் ஒரு விவசாயி. அதே நேரத்தில் மக்களையும் ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சியையும் பார்க்கவேண்டும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் விரைவுச் சாலைக்கு ஆதரவு கொடுக்கிறோம்.
அதிமுகவில் இருந்து யாரும் திமுகவில் இணையவில்லை. அதிமுகவில் உள்ள ஒரு தொண்டனைக் கூட தொட்டுப் பார்க்கமுடியாது. அனைவரும் கட்சியும் ஆட்சியும் நீடித்து நிலைக்க, ஒற்றுமையாகப் பணியாற்றி வருகின்றனர்'' என்றார் பழனிசாமி.