

மாநிலங்களவை உறுப்பினராக 23 ஆண்டுகளுக்குப்பின் தேர்வு செய்யப்பட்ட வைகோ நாடாளுமன்றம் சென்றார். அங்கு சுப்ரமணியன் சுவாமி அவரை நலம் விசாரித்தார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்தவாரம் நடைபெற்றது. திமுக சார்பில் 3 உறுப்பினர்களும், அதிமுக சார்பில் மூன்றுபேரும் தேர்வு செய்யப்பட்டனர். திமுக சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்வு செய்யப்பட்டார்.
மாநிலங்கவையில் 1978-ம் ஆண்டு அடியெடுத்து வைத்தவர் வைகோ. அவரது ஆற்றல்மிக்க, வலுவான வாதம் மாற்றுக்கட்சியினரையும் கவர்ந்த ஒன்று. இந்திரா காந்தியால் ‘மை சன்’ என அன்போடு அழைக்கப்பட்டவர். பின்னர் 1984-ம் ஆண்டும், பின்னர் 1990-ம் ஆண்டும் மூன்றுமுறை தொடர்ச்சியாக மாநிலங்களவையில் எம்பியாக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார்.
1998-ம் ஆண்டு சிவகாசி மக்களவை தொகுதியில் உறுப்பினரானார், பின்னர் மீண்டும் 1999-ல் அதே தொகுதியில் மக்களவை உறுப்பினரானார். டெல்லி அரசியலில் குறிப்பிடத்தக்க நாடாளுமன்ற பேச்சாளர்களில் வைகோவும் ஒருவர். பாஜக, இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சித் தலைவர்களுடனும் ஆழமான நட்பு பாராட்டி வருபவர்.
வடமாநில தலைவர்கள் பலருக்கு இனிய நண்பர், 1993-ல் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர் மதிமுக தொடங்கிய பின்னர் அவர் போட்டியிட்ட தேர்தலில் 98, 99 தேர்தலில் மட்டுமே வென்றார். சட்டப்பேரவை உறுப்பினராக போட்டியிட்டதில்லை. போட்டியிட்டு ஒருமுறையும் வாபஸ் பெற்றார்.
தனது கட்சி பாஜக அரசில் அங்கம் வகித்தபோதும் மத்திய அமைச்சர் பதவியை தான் வகிக்க விரும்பாமல் கட்சியில் உள்ளவர்களுக்கு வழங்கினார்.
2014-ம் ஆண்டு அவர் மோடி பிரதமராக வரவேண்டும் என தீவிரமாக பிரச்சாரம் செய்தார். மோடியின் ஆட்சி அமைந்தப்பின்னர் ராஜபக்ஷேவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை விமர்சித்து கூட்டணியிலிருந்து வெளியேறினார்.
மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக எதிர்த்தார். இதனால் தமிழக பாஜக தலைவர்களும் வைகோவை கடுமையாக விமர்சித்தனர். பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் தானே நேரடியாக களத்தில் குதித்து கருப்புக்கொடி காட்டி கைதானார்.
பின்னர் திமுக அணியில் இணைந்த வைகோ 2019- தேர்தலில் திமுகவுடன் ஏற்பட்ட ஒப்பந்தப்படி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அவரது தேர்வு நேரத்திலும் திமுக தொடர்ந்த தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு இடையூறாக வந்தது. ஆனால் ஓராண்டு சிறை என்பதால் தடை நீங்கியது. பின்னர் போட்டியின்றி தேர்வானார் வைகோ.
வைகோ 23 ஆண்டுகளுக்குப்பின் மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நுழைந்தவுடன் வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா, காமராஜர், முத்துராமலிங்க தேவர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நுழைந்த வைகோவை வரவேற்றார் சுப்ரமணியன் சுவாமி. வைகோவை கட்டி அணைத்து நலம் விசாரித்தார் சுப்ரமணியன் சுவாமி, சிரித்தப்படியே அவருக்கு பதிலளித்த வைகோ அவரது நலத்தை விசாரித்தார்.
இருவரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இதற்கு 2 நாட்களுக்கு முன்தான் சுப்ரமணியன் சுவாமி வைகோவை கடுமையாக விமர்சித்து இவர் மீது நன்னெறி கமிட்டி மூலம் தேர்வை ரத்துச் செய்ய வாய்ப்புள்ளதா என ஆராயுமாறு குடியரசு துணைத்தலைவரை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.