Published : 22 Jul 2019 02:37 PM
Last Updated : 22 Jul 2019 02:37 PM

புதிய கல்விக் கொள்கை வந்தால் கல்வியில் ஏற்றத்தாழ்வு இருக்காது: தமிழிசை

தமிழிசை: கோப்புப்படம்

திருவள்ளூர்

புதிய கல்விக் கொள்கை வந்தால் கல்வியில் ஏற்றத்தாழ்வு இருக்காது என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையத்தில் உள்ள வைகுண்டர் கோயிலில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ''புதிய கல்விக் கொள்கை வந்தால், சமமான கல்வி அனைவருக்கும் நிச்சயம் கிடைக்கும்'' எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், "சூர்யா, திருமாவளவன், ரஜினி போன்றோர் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறுகின்றனர். புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து கருத்து தெரிவிக்க இன்னும் இம்மாதம் வரை கால அவகாசம் உள்ளது. அவர்களின் கருத்தை அதில் பதிய வைக்கலாம். ஜனநாயக முறைப்படி அதற்கான அவகாசத்தை மத்திய அரசு கொடுத்திருக்கிறது. இப்போது கொடுத்திருப்பது வெறும் வரைவு மட்டும் தான். அதில், எந்தக் கருத்து பிடிக்கவில்லை என்பதைப் பதிவு செய்யலாம்.

இப்போது எங்கே சமமான கல்வி இருக்கிறது? பணக்காரர்களுக்கு ஒரு கல்வி, ஏழைகளுக்கு ஒரு கல்வி தானே இருக்கிறது. தமிழகத்தில் செல்வந்தர்கள் படிக்கும் பள்ளியே இல்லையா? இப்போது ஏதோ சமமான கல்வி இருப்பது போலவும், புதிய கல்விக் கொள்கை வந்தால் ஏற்றத்தாழ்வு வந்துவிடும் என்பது போன்றும் பேசுகின்றனர். இப்போதுதான் கல்வியில் சமமான நிலை இல்லை. புதிய கல்விக் கொள்கை வந்தால் சமமான நிலை வரும்", என தமிழிசை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x