Published : 22 Jul 2019 02:35 PM
Last Updated : 22 Jul 2019 02:35 PM

புதிய கல்விக்கொள்கை விவகாரம்: ஆதரவு தெரிவித்த ரஜினிக்கு சூர்யா நன்றி

புதிய கல்விக் கொள்கை குறித்த தனது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ரஜினிக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற அகரம் அறக்கட்டளையின் 40-வது ஆண்டுவிழாவில் பேசிய நடிகர் சூர்யா, தேசியக் கல்விக் கொள்கையின் புதிய திட்டங்கள் 3 வயதிலேயே மும்மொழிக் கல்வியைத் திணிப்பதாகவும் ஆசிரியரே இல்லாமல் நீட் தேர்வு எழுதுவது எப்படி என்றும் விமர்சித்திருந்தார். 

கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை மீதான ஆலோசனைகளை, மாற்றங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் என அனைவருமே ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள். 30 கோடி மாணவர்களின் எதிர்காலம் தேசியக் கல்விக் கொள்கையில் உள்ளது. இதில் எதற்கு அவசரம்? பரிந்துரைகளை அளிக்க ஒரு மாத கால அவகாசம் மட்டும் அளித்தது ஏன்? ஏன் நாம் அத்தனை பேரும் வரைவு அறிக்கை குறித்துப் பேசவில்லை? என்றும் சூர்யா கேள்வி எழுப்பியிருந்தார். 

இதற்கு தமிழிசை, எச்.ராஜா போன்ற பாஜக தலைவர்களும் அதிமுக நிர்வாகிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். சீமான், கமல் ஆகியோர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், ரஜினியும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நடிகர் சூர்யாவின் ‘காப்பான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி, ஆர்யா, இயக்குநர் ஷங்கர், கவிஞர்கள் வைரமுத்து, கபிலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ''சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன்பு தெரிந்தது. அவர் கூறிய புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தை நான் ஆமோதிக்கிறேன். அதை வரவேற்கிறேன். இதுகுறித்து நான் பேசினால் பிரதமர் மோடிக்கு கேட்கும் என இங்கே சொன்னார்கள். ஆனால், சூர்யா பேசியே மோடிக்கு கேட்டுள்ளது. மாணவர்கள் படும் கஷ்டங்களை சூர்யா கண் எதிரே பார்த்தவர். மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினியின் கருத்துக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா, ''அன்பிற்கினிய ரஜினிகாந்த் சார், உங்களின் மதிப்புமிக்க நேரத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி. என்னுடைய உண்மையான வணக்கங்கள். வாழ்நாள் நினைவை அளித்தமைக்கு நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x