

மழைநீர் சேமிப்பை அரசு மட்டும் செய்ய முடியாது. பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
போதிய மழையின்மையால் மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. அனைத்து நீர்நிலைகளையும் தூர் வாரி, அவற்றில் அதிக அளவு தண்ணீர் சேமிக்கப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ''மழைநீர் சேமிப்பின் அவசியம் பற்றியும், அதனால் நமக்கு மட்டுமின்றி, அடுத்த தலைமுறைக்கும் விளையும் பயன்கள் குறித்தும் அனைவரும் அறிந்ததே.
சமீபத்திய மழையில், எத்தனை சதவீதம் நீரை நாம் சேமித்து வைத்திருக்கிறோம்? அரசு தொடர்ந்து தனது கடமையைச் செய்துகொண்டே இருக்கிறது. ஆனால் மழைநீர் சேமிப்பை ஒரு குழுவோ, அமைப்போ, அரசோ மட்டும் செய்து முடிப்பது அவ்வளவு சுலபமல்ல.
அவரவர் இருப்பிடத்தில் மழைநீரைச் சேமிப்பதே இதற்கு நிரந்தரத் தீர்வாகும். இதைக் கருத்தில்கொண்டு தமிழக மக்கள் அனைவரையும் வடகிழக்குப் பருவ மழைக்கு முன், மழைநீரைச் சேகரிக்கும் மகத்தான பணியில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு, மழைநீரையும் சேமிப்போம் என்று உறுதி கொள்வோம்.
நமக்காக! நாட்டுக்காக! நாளைக்காக!'' என்று பதிவிட்டுள்ளார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.